ஸ்பெயினிலிருந்து சென்னை திரும்பிய ஸ்டாலின்… விஜய் அரசியல் பிரவேசம் குறித்து பேசியது என்ன?!

தமிழ்நாட்டுக்கு முதலீடுகளைப் பெறுவதற்காக, கடந்த ஜனவரி 27-ம் தேதி சென்னையிலிருந்து ஸ்பெயின் நாட்டுக்கு கிளம்பிய முதல்வர் ஸ்டாலின், இன்று காலை சென்னை திரும்பினார். பின்னர், விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், “தமிழ்நாட்டுக்குப் பல்வேறு முதலீடுகளை ஈர்த்துவிட்டுத் திரும்பியிருக்கிறேன். அந்த வகையில் இந்தப் பயணம் சாதனை பயணமாக அமைந்திருக்கிறது. ஸ்பெயினில், அந்த நாட்டு பொருளாதார மற்றும் வர்த்தக துறை அமைச்சக அதிகாரிகள், தொழில் கூட்டமைப்பு பொறுப்பாளர்கள், Invest Spain என்ற அமைப்பைச் சேர்ந்தவர்களைச் சந்தித்தேன். தமிழ்நாட்டில் முதலீடு செய்யவேண்டுமென்று அவர்களைக் கேட்டுக்கொண்டேன்.

முதல்வர் ஸ்டாலின்

ஆக்சியானா நிறுவனம், ரோகா நிறுவனம், ஹைபக் லாய்டு நிறுவனம், டால்கோ நிறுவனம், எடிபான் நிறுவனம், மேப்ட்ரீ நிறுவனம் உள்ளிட்ட உலகின் முன்னணி நிறுவனங்களின் நிர்வாகிகளைச் சந்தித்தேன். இந்தப் பயணம் மூலம் ரூ.3,440 கோடி அளவுக்கு முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

உற்பத்தித் துறையில் சீனாவுக்கு மாற்றாக இந்தியா கருதப்பட்டு வரும் இந்த வேளையில், உற்பத்தித்துறையில் முந்தி செயல்படுகிற மாநிலமாகத் தமிழ்நாடு முன்னேறி வருவதை நியூயார்க் பத்திரிகை சுட்டிக்காட்டியிருக்கிறது. இந்தியா பயணிக்கிற பாதையில் முந்தி பயணிக்கிற மாநிலமாக மட்டுமல்லாமல், தமிழ்நாடு தனக்கென்று தனிப்பாதை அமைத்துச் செயல்படுவதாகவும் நியூயார்க் பத்திரிகை தனது முதற்பக்கத்தில் பாராட்டியிருக்கிறது. இதுபோன்ற பாராட்டுக்கள்தான் எங்களை மேலும் உற்சாகப்படுத்திச் செயல்பட வைக்கிறது. தமிழ்நாட்டை தொழில்துறையில் சிறந்த மாநிலமாக உயர்த்த ஸ்பெயின் பயணம் மிக பயனுள்ளதாக அமைந்திருக்கிறது. இதுபோன்று அடுத்தடுத்த பயணங்கள் திட்டமிடப்படும். அதேசமயம், நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால் அதற்குப் பிறகுதான் என்னுடைய பயணங்கள் இருக்கும்” என்று கூறினார்.

முதல்வர் ஸ்டாலின்

அதைத்தொடர்ந்து, நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் பிரதமர் மோடி உரையாற்றியது குறித்து பத்திரிகையாளர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த ஸ்டாலின், “அவர் பேசியதைப் பார்த்தேன், ரசிச்சேன், சிரிச்சேன். அவர்கள் ஆட்சிக்கு வந்த நாள்முதல் முதல், அவர்கள் எதிர்க்கட்சி போலவும், காங்கிரஸ்தான் ஆளுங்கட்சி போலவும், காங்கிரஸை அவர் தாக்கிப் பேசிக்கொண்டிருக்கிறார். இதுதான் புரியாத புதிராக இருக்கிறது. 400 இல்லை மொத்தம் 543 இடங்களையும் கைப்பற்றுவோம் என்று அவர் கூறினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை” என்று கூறினார்.

விஜய்

இறுதியாக, நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கியது குறித்த கேள்விக்கு, “மக்களுக்குத் தொண்டாற்ற யார் வந்தாலும் நான் மகிழ்ச்சியடைவேன்” என்று ஸ்டாலின் பதிலளித்தார்.

முன்னதாக, விஜய்யின் அரசியல் வருகை குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “இந்திய ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் அரசியல் இயக்கம் ஆரம்பிக்க உரிமையுள்ளது. நடிகர் விஜய் அரசியல் இயக்கம் தொடங்கியதற்கு நாம் அனைவரும் சேர்ந்து பாராட்டு தெரிவிப்போம். அவரது மக்கள் பணி சிறக்கட்டும்” என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.