Doctor Vikatan: என் வயது 44. கடந்த 8 வருடங்களாக மாதவிலக்கின்போது கடுமையான வலியை அனுபவிக்கிறேன். பல சிகிச்சைகளை மேற்கொண்ட பிறகு கடைசியாக எனக்கு எண்டோமெட்ரியாசிஸ் எனும் பிரச்னை இருப்பதாகச் சொன்னார்கள் மருத்துவர்கள். சிலர் இதற்கு சிகிச்சையே இல்லை என்றும் சொல்கிறார்கள். உயிரே போகும் அளவுக்கு வலியை ஏற்படுத்தும் இந்தப் பிரச்னையை சரி செய்ய வாய்ப்பே இல்லையா?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மகளிர்நலம் மற்றும் குழந்தையின்மை சிகிச்சை சிறப்பு மருத்துவர் மாலா ராஜ்.

கர்ப்பப்பையின் உள்ளே உள்ள லேயரை எண்டோமெட்ரியம் என்று சொல்வோம். மாதவிலக்கின்போது இந்த எண்டோமெட்ரியம் திசுக்கள்தான் உதிர்ந்து ரத்தப்போக்காக வெளியேறும். மாதந்தோறும் அது உதிர்ந்துகொண்டே இருக்கும்.
கர்ப்பப்பைக்கும் கருக்குழாய்களுக்கும் இடையில் சின்னதாக ஓர் இணைப்பு இருக்கும். சிலருக்கு மாதவிடாயின்போது ரத்தப்போக்கானது இந்த இணைப்பு வழியே, குழாய்களுக்கு வெளியே கசிய ஆரம்பிக்கும். நோய் எதிர்ப்பாற்றல் நன்றாக உள்ளவர்களுக்கு இந்தக் கசிவானது உட்கிரகித்துக்கொள்ளப்படும். அதுவே, நோய் எதிர்ப்பாற்றல் குறைவாக உள்ளவர்களுக்கு அந்தக் கசிவானது உறிஞ்சப்படாமல் உறுத்த ஆரம்பிக்கும். இதைத்தான் ‘எண்டோமெட்ரியாசிஸ்’ என்கிறோம்.

கர்ப்பப்பையின் அருகில் உள்ள சிறுநீர்ப்பை, மலம் வெளியேறும் பாதை போன்றவற்றையும் இது பாதிக்கும். குழாய் வழியே கசிவானது வெளியேறி சினைப்பையில் சேகரமாகும். நிறைய சேர்ந்ததும் அது உள்ளே போய் பலூன் போன்று சாக்லேட் சிஸ்ட்டாக உருவாகும்.
பெண்களை பாதிக்கும் பிரச்னைகளில் மிகவும் வலி நிறைந்தது இந்த எண்டோமெட்ரியாசிஸ். நரம்புகளையும் பாதிக்கும். அலட்சியப்படுத்தினால் சிறுநீரகங்களைச் செயலிழக்கச் செய்யும் அளவுக்கு இது மோசமான பிரச்னை. நம் உடலில் இயல்பாக உள்ள திரவமானது, இந்த எண்டோமெட்ரியம் கசிவை உடலின் எந்தப் பகுதிக்கு வேண்டுமானாலும் தூக்கிச் செல்லும். நெஞ்சுவரைகூட அது போகலாம்.

புற்றுநோயைவிடவும் கொடுமையான பாதிப்பு இது. பீரியட்ஸின் போது கடுமையான வலி இருக்கும். இயல்பு வாழ்க்கையை பாதிக்கிற அளவுக்கு அது தீவிரமாக இருக்கும். ஸ்கேன் செய்து பார்த்தால் எண்டோமெட்ரியாசிஸ் பாதிப்பை உறுதி செய்யலாம்.
குழந்தையின்மைக்கான பிரதான காரணங்களில் இந்தப் பிரச்னையும் ஒன்று. கருமுட்டை வரவேண்டிய பாதையில் சாக்லேட் சிஸ்ட் இருப்பதால் முட்டை வருவதே தடைப்படும். முட்டைகளின் எண்ணிக்கையும் பாதிக்கப்படும்.
எண்டோமெட்ரியாசிஸ் பிரச்னை உள்ளவர்களுக்கு சினைப்பையில் முட்டைகளின் இருப்பு மிகக் குறைவாக இருக்கும். ரத்தப் பரிசோதனையில் இதை உறுதிசெய்வோம். முட்டைகளின் தரத்தையும் பாதிக்கும். அப்படியே கருத்தரித்தாலும் கருவின் தரம் மோசமாக இருந்து அபார்ஷன் ஆகலாம்.

எந்த வயதில் இந்தப் பிரச்னை பாதித்திருக்கிறது என்பதைப் பொறுத்து சிகிச்சைகள் வேறுபடும். குழந்தை பெறாதவர்களுக்கு மருந்து மாத்திரைகள் மூலம் சிகிச்சை தருவோம். குழந்தை பெற்றவர்களுக்கு கர்ப்பப்பையையும், தேவைப்பட்டால் சினைப்பைகளையும் நீக்கும் சிகிச்சை பரிந்துரைக்கப்படும்.
எனவே, உங்கள் விஷயத்தில் நீங்கள் குழந்தைப் பிறப்பை முடித்திருப்பீர்கள் என்றே தெரிவதால், எண்டோமெட்ரியாசிஸையும் அகற்றி கர்ப்பப்பையும் அகற்றும் அறுவை சிகிச்சை தீர்வாக இருக்கும். தாமதிக்காமல் மகப்பேறு மருத்துவரிடம் ஆலோசனை பெறவும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.