கமலின் தயாரிப்பில் லோகேஷ் – ஸ்ருதிஹாசன் இணைந்திருக்கும் புகைப்படத்துடன் `Inimel Delulu is the New Solulu’ என வெளியான அறிவிப்புதான் தற்போது வைரல். `இதுவே உறவு… இதுவே சூழல்… இதுவே மாயை’ என்ற வரிகளும் காதலை அள்ளிக் தெளிக்க, இது இசை ஆல்பமா, அல்லது லோகேஷ் கதாநாயகனாக ஸ்ருதிஹாசனுடன் இணைந்து நடிக்கும் படத்தின் அறிவிப்பா எனப் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இது குறித்து விசாரித்ததில் கிடைத்த தகவல் இனி…

“லோகேஷ் கனகராஜ், ஸ்ருதிஹாசன் இணைந்துள்ள புகைப்படம், ஓர் இசை ஆல்பத்துக்கான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டராகும். சமீபத்தில் துபாயில் நடந்த விருது விழா ஒன்றில், சிறந்த பாடகருக்கான விருதினை கமல்ஹாசனுக்கு, ஸ்ருதிஹாசன் வழங்கினார். அந்த மேடையில் கமல்ஹாசன், ‘ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் மற்றும் ஸ்ருதிஹாசன் இணைந்து புதிய இசை படைப்பு ஒன்றில் பணியாற்றவிருப்பதாக’ ஒரு தகவலைப் பகிர்ந்திருந்தார். அந்த இசைப்படைப்பே இந்த ஆல்பம்.
ஸ்ருதிஹாசனே பாடல் எழுதியுள்ளதுடன், இதை மியூசிக் வீடியோ ஆல்பமாகவும் கொண்டு வர விரும்பினார். அதில் லோகேஷ் கனகராஜ் நடித்தால் இன்னும் புதுப்பரிமாணம் கிடைக்கும் என நினைத்தவர், இதுகுறித்து லோகேஷிடமும் கேட்டிருக்கிறார். ஸ்ருதியின் பாடலைக் கேட்ட லோகேஷ், நடிக்க சம்மதித்ததுடன், உடனே படப்பிடிப்புக்கும் ரெடியானார். இந்த இசை ஆல்பத்தின் கிரியேட்டிவ் ஹெட்டும் ஸ்ருதிஹாசன்தான். கமலின் ராஜ்கமல் நிறுவனம் இந்த ஆல்பத்தைத் தயாரித்திருக்கிறது.

சென்னையில் நேற்று தொடங்கிய இதன் படப்பிடிப்பு, இன்றும் நடைபெற்று வருகிறது. மொத்தமே இரண்டே இரண்டு நாள்கள் படப்பிடிப்புதான். இந்த ஆல்பத்தில் ஒரே ஒரு பாடல் மட்டுமே இடம் பெறுகிறது. ‘இனிமேல் டெல்லுலு இஸ் த நியூ சொல்லுலு’வின் என இதன் வரிகளை அறிவித்துள்ளனர். காதல் தினத்தன்று இந்த ஆல்பம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்ருதிஹாசன் இதற்கு முன் ‘எட்ஜ்’, ‘ஷீ இஸ் எ ஹீரோ’ எனும் இரண்டு சுயாதீன இசை ஆல்பங்களை வெளியிட்டிருக்கிறார். இது அவரது மூன்றாவது இசை ஆல்பமாகும்.