நயன்தாராவைத் தொடர்ந்து கீர்த்தி சுரேஷும் பாலிவுட்டில் பேபி ஜான் படத்தின் மூலம் அறிமுகமாகிறார். மலையாளத்தில் வெளியான ‘கீதாஞ்சலி’ படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான கீர்த்தி சுரேஷ், சினிமாவில் பத்தாண்டுகளைக் கடந்து விட்டார்.
தனது படங்கள் ஒவ்வொன்றையும் கவனமாகத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். குறிப்பாக ஹீரோயின் சென்ட்ரிக் கதைகளுக்கு முன்னுரிமை கொடுத்து வரும், கீர்த்தியின் கதைத் தேர்வுகள் வியக்க வைக்கின்றன.

இப்போது இந்தியில் வருண் தவானின் 18வது படமாக உருவாகி வரும் ‘பேபி ஜான்’ படத்தில் நடித்து வருகிறார். தமிழில் தயாரிப்பாளராகவும் ஜெயித்த, அட்லி இந்த படத்தின் மூலம் இந்தியில் தயாரிப்பாளராக களமிறங்கியிருக்கிறார். இப்படம் ‘தெறி’ படத்தின் ரீமேக். தமிழில் ‘கீ’ படத்தை இயக்கிய காளீஸ் இதனை இயக்குகிறார். வருண் தவான், கீர்த்தி சுரேஷ், வாமிகா கபி, ஜாக்கி ஷெராப், ராஜ்பால் யாதவ், பி. எஸ். அவினாஷ் எனப் பலர் நடிக்கின்றனர். கிரண் கௌஷிக் ஒளிப்பதிவு செய்கிறார். தமன் இசையமைக்கிறார். சமீபத்தில் மும்பையில் தொடங்கிய இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தவிர இந்தியில் வெப்சிரீஸ் ஒன்றையும் கைவசம் வைத்துள்ளார்.
இதற்கு முன்னர், ஜெயம் ரவியுடன் நடித்த ‘சைரன் 108’ இம்மாதம் 16ம் தேதி வெளியாகிறது. இந்தப் படத்தில் போலீஸ் அதிகாரி நந்தினியாக நடித்திருக்கிறார். இந்தக் கதாபாத்திரம் அவருக்கு மிகவும் பிடித்துப் போய்விட ‘என் பத்தாண்டு திரைப்பயணத்தில் மறக்க முடியாத கதாபாத்திரமாக நந்தினி அமைந்தது’ என கீர்த்தியே பெருமைப்பட்டுள்ளார். தவிர, தமிழில் ‘ரகு தாத்தா’, ‘ரிவால்வர் ரீட்டா’, ‘கண்ணிவெடி’ என ஹீரோயின் சென்ட்ரிக் படங்களும் வரிசைகட்டி வைத்திருக்கிறார்.
இந்தியில் ‘ரகு தாத்தா’ படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டது. ‘கே.ஜி.எஃப்’ படத்தை தயாரித்த ஹோம்பாலே, இப்படத்தின் மூலம் நேரடி தமிழ் படத்தைத் தயாரிக்கிறது. இறங்கியிருக்கிறது. இதில் கீர்த்தியுடன் எம்.எஸ்.பாஸ்கர், தேவதர்ஷினி, ரவீந்தர விஜய், ஆனந்த் சாமி, இஸ்மத் பானு, ஆதிரா, ஜெய்குமார், ராஜீவ் ரவிந்தரநாத், மனோஜ்குமார் கலைவாணன் என பலரும் நடித்துள்ளனர். அறிமுக இயக்குநர் சுமன் குமார் இயக்கியுள்ளார்.
இதற்கடுத்து ஜெய் நடித்த ‘நவீன சரஸ்வதி சபதம்’ படத்தை இயக்கிய சந்துரு இயக்கத்தில் ‘ரிவால்வர் ரீட்டா’வில் நடித்துள்ளார். ராதிகா, ரெடின் கிங்ஸ்லி என பலரும் நடிக்கிறார்கள். இது ஒரு ஆக்ஷன் டிராமா. ‘ரகு தாத்தா’ வெளியீட்டுக்குப் பின், இதனை திரைக்குக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளனர். இதன் இறுதிக் கட்ட படப்பிடிப்பு தற்போது பாண்டிச்சேரி பகுதிகளில் நடந்து வருகிறது.

மேற்கண்ட இரண்டு படங்கள் தவிர அறிமுக இயக்குநர் கணேஷ்ராஜ் இயக்கத்தில், எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில் ‘கண்ணி வெடி’ என்ற படத்திலும் நடித்து வருகிறார். இப்படத்திற்கு ‘டாணாக்காரன்’ மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்கிறார். விஜே.ரக்ஷன், நமீதா கிருஷ்ணமூர்த்தி, தெலுங்கு நடிகர் சத்ரு எனப் பலர் நடித்துவருகிறார்கள். இரண்டு ஷெட்யூல் படப்பிடிப்பு நடந்திருக்கிறது. ‘ரிவால்டர் ரீட்டா’வை முடித்துக் கொடுத்துவிட்டு இதன் படப்பிடிப்புக்கு வருகிறார் கீர்த்தி சுரேஷ்.