அடுத்த நிதியாண்டில் பணவீக்கம் 4.5 சதவீதமாக குறையும்- ரிசர்வ் வங்கி கணிப்பு

மும்பை:

இந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு (எம்பிசி) கூட்டம் மும்பையில் நடைபெற்றது. நேற்று முன்தினம் தொடங்கிய இக்கூட்டம் இன்று நிறைவு பெற்றது. இக்கூட்டத்திற்கு பிறகு ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நுகர்வோர் விலைக்குறியீடு அடிப்படையிலான பணவீக்கம் 4 சதவீதமாக இருக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதற்கு ஏற்ப நிதி கொள்கை குழு அளவுகோல் விகிதத்தை அமைக்கிறது.

உள்நாட்டுப் பொருளாதார செயல்பாடுகள் நல்ல நிலையில் உள்ளன. முதலீட்டுத் தேவையின் வேகம், நம்பிக்கையான வணிக உணர்வுகள் மற்றும் அதிகரித்து வரும் நுகர்வோர் நம்பிக்கை சாதகமாக இருக்கும் என நிதி கொள்கை குழு மதிப்பிட்டுள்ளது.

அடுத்த ஆண்டு பருவமழை இயல்பான அளவுக்கு இருந்தால், 2024-25 நிதியாண்டுக்கான பணவீக்கம் 4.5 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அதாவது முதல் காலாண்டில் 5.0 சதவீதம், இரண்டாம் காலாண்டில் 4.0 சதவீதம், மூன்றாம் காலாண்டில் 4.6 சதவீதம், நான்காம் காலாண்டில் 4.7 சதவீதம் என்ற அளவில் இருக்கும். பணவீக்க அபாயங்கள் சமநிலையில் உள்ளன.

இவ்வாஈறு அவர் கூறினார்.

நடப்பு நிதியாண்டில் பணவீக்கம் 5.4 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டிருந்த நிலையில், அடுத்த நிதியாண்டு பணவீக்கம் குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணவீக்கத்தைக் குறைக்கவும், வளர்ச்சியை அதிகரிக்கவும் ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படாமல் 6.5 சதவீதமாக வைத்திருக்கிறது ரிசர்வ் வங்கி. அதேசமயம் உணவு பணவீக்க அபாயம் தொடரும் என குறிப்பிட்டுள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.