புதுடெல்லி: சுதந்திர இந்தியாவில் சிறுபான்மையினர் மீதான அடக்குமுறையை எந்த அரசும் இதுபோல் செய்யவில்லை என இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் எம்.பியான கே.நவாஸ்கனி தெரிவித்தார். இந்தக் குற்றச்சாட்ட்டை அவர் வியாழக்கிழமை மக்களவையில் இடைக்கால பட்ஜெட் விவாதத்தில் பேசும்போது முன்வைத்தார்.
இது குறித்து ராமநாதபுரம் மக்களவை தொகுதி எம்பியான கே.நவாஸ்கனி தனது உரையில் பேசியது: “பத்தாண்டு காலம் தொடர்ந்து ஆட்சி அதிகாரத்தில் சொல்லிக் கொள்ளும்படி எந்தவித சாதனையையும், வளர்ச்சியையும் இந்த அரசு செய்யவில்லை. வருமான வரி உச்சவரம்பில் எந்தவித மாற்றமும் இல்லாமல் ஏமாற்றம் அளிக்க கூடிய வகையில் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. இந்த அரசின் வாக்குறுதிகள் அனைத்துமே மதுரை எய்ம்ஸ் போல ஒற்றை செங்கலோடு நின்று விடுகிறது. வெறும் கவர்ச்சிகரமான அறிவிப்பை மட்டும் வெளியிடுகிறது இந்த அரசு. அதை முழுமையாக நிறைவேற்றுவதற்கு எந்த முயற்சியும் செய்வதில்லை. பத்தாண்டுகளாக என்னுடைய தொகுதி சார்ந்து நான் முன்வைத்த எந்த கோரிக்கைகளுக்கும் இந்த அரசு செவி மடுக்கவில்லை.
பாஜக அரசின் பார்வை தேர்தல் நெருங்கும் இந்த நேரத்தில் ராமநாதபுரம் தொகுதியின் மீது திடீர் பாசம் வந்திருக்கிறது. இங்கு, விமான நிலையம் அமைக்கப்பட வேண்டும் என்று கடந்த 5 ஆண்டுகளாக தொடர்ந்து இந்த அவையில் கோரிக்கை வைத்துக் கொண்டிருக்கிறேன். ராமநாதபுரம் விமான நிலையம் தொடர்பான என்னுடைய எழுத்துபூர்வமான கேள்விக்கு, சென்னையிலிருந்து ராமநாதபுரத்திற்கு விமான சேவை துவங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், அதற்கான எந்த ஆக்கபூர்வ பணிகளும் இதுவரையில் துவங்கப்படவில்லை .
ராமநாதபுரம் லாந்தை பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க, நிதி அமைச்சர் நம் மாவட்டத்துக்கு வருகை தந்தபோது ரயில்வே துறை அறிவித்தது. அதற்கு மத்திய அரசு அனுமதியும் வழங்கி இருக்கிறது. தற்போது அனுமதி அளிக்கப்பட்டிருக்கும் இந்த லாந்தை ரயில்வே மேம்பாலமாவது மதுரை எய்ம்ஸ் ,ராமநாதபுரம் விமான நிலையம் போல வெறும் அனுமதியோடு இருந்து விடாமல் விரைவாக அதற்கு நிதி ஒதுக்கி பணிகளை துவங்க வேண்டும்.
இந்துக்களின் புனிதத்தலமாகிய ராமேஸ்வரத்தை உள்ளடக்கியது என்னுடைய தொகுதி. ஆயிரக்கணக்கான மக்கள் அங்கு தினந்தோறும் வந்து செல்வதால், அந்த பகுதியை சிறந்த சுற்றுலாத்தலமாக உருவாக்கிட வேண்டும், கடந்த ஐந்து ஆண்டுகளாக பிரதமர் உட்பட பல மத்திய அமைச்சர்கள் அங்கு வருகை தந்து கொண்டிருக்கிறார்கள். இந்த வருகையின் போது, தங்களுடைய அரசியல் நாடகத்தை அரங்கேற்றி செல்கிறார்களே தவிர, முன்னேற்றத்திற்கான எந்தவித சிறப்பு நிதியும் ஒதுக்கவில்லை. நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளை கூட எங்கள் பகுதிக்கு நீங்கள் இதுவரை நிறைவேற்றவில்லை. தனுஷ்கோடி வரை ரயில்வே வழித்தடம் அமைக்கப்படும் திட்டம் அறிவித்ததோடு நிற்கிறது. அதற்கான எந்த முன்னெடுப்பும் இதுவரையும் ஏற்படுத்தப்படவில்லை.
சிறுபான்மை மாணவர்களுக்கு வழங்கப்பட்ட அத்தனை கல்வி உதவி தொகைகளை நிறுத்தியதுடன், வேறுபல நிதிகளை இந்த அரசு தொடர்ந்து குறைத்து வருகிறது. சிறுபான்மை மக்கள் மீது பாரபட்சமான பார்வையை அனைத்து நிலைகளிலும் காட்டிக் கொண்டிருக்கின்றது. கடந்த 75 ஆண்டுகால சுதந்திர இந்தியாவின் வரலாற்றிலே இது போன்று சிறுபான்மை மக்கள் மீதான அடக்குமுறையை எந்த அரசும் செய்யவில்லை. சிறுபான்மையினரின் வழிபாட்டு தலங்கள் எல்லாம் பாதுகாப்பு இல்லாமல் இருக்கின்றது . சிறுபான்மையினரின் வழிபாட்டுத்தலங்களிலே பெரும்பான்மையினரின் கடவுள்களை தேடக்கூடிய நிலையை மாற்ற வேண்டும்.
சிறுபான்மையினருக்கான 1991-ல் ஏற்படுத்தப்பட்ட வழிபாட்டுத்தலங்கள் பாதுகாப்புச் சட்டத்தை உறுதி செய்ய வேண்டும். சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும. காங்கிரஸ் ஆட்சியிலே ரூபாய் 400க்கு விற்ற சமையல் எரிவாயு விலை, இன்றைக்கு ஆயிரம் ரூபாய் மேல் இருக்கின்றது. பெட்ரோல் டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்கள் விலையெல்லாம் உயர்ந்து இருக்கின்றது. அந்த விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவதற்கு இந்த அரசு தோல்வி அடைந்திருக்கின்றது. உங்களுடைய தோல்விகளை மறைத்து வார்த்தை ஜாலங்களால் சாதனைகளாக காட்டும் அரசியல் நாடகத்தை மக்கள் தெளிவாக நினைவிலே கொள்வார்கள். நீங்கள் சிறப்பாக மறைத்த விவகாரங்களையெல்லாம் வாக்களிக்கும் போது மக்கள் நினைவில் கொள்வார்கள், என்று அவர் பேசினார்.
தேர்தலுக்காக மீனவர்கள் மீது பாசம்: “நாட்டின் பாதுகாப்பிற்கு அதிகமான நிதியை ஒதுக்குகிறது இந்த அரசு. அதே நேரத்தில் எங்கள் பகுதி மீனவர்களின் பாதுகாப்பிற்கு இதுவரை எந்த நிரந்தர தீர்வையும் எட்ட முடியாத நிலையில் இருக்கிறது. இலங்கை கடற்படையால் ராமேஸ்வரம் மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவது, அவர்கள் கைது செய்யப்படுவது, அவர்களின் படகுகள் எல்லாம் சிறைபிடிக்கப்படுவது எல்லாம் தொடர்ந்து நடைபெற்று கொண்டு தான் இருக்கின்றது. கடந்த சில மாதங்களுக்கு முன்பாக தான் நமது நிதியமைச்சர் அங்கே வருகை புரிந்தார். அப்போது, அங்கே பிடிபட்ட இரண்டு படகுகளின் உரிமையாளர்களும், கைது செய்யப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினரும் சந்தித்து அவர்கள் உடனடியாக விடுவிக்கப்படவும் கோரியிருந்தனர்.
இதற்கு மத்திய நிதியமைச்சர் வெளியுறவு துறையை தொடர்பு கொண்டு அங்கு இருக்கும் இந்திய தூதரகம் மூலமாக உடனடியாக மீனவர்களும், அவர்களின் படகுகளும் விடுவிக்கப்பட்டன. மீனவர்கள் கைது செய்யப்படும் போதெல்லாம் தமிழக முதல்வர் மீனவர்கள் விடுவிக்கப்படும் வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார்கள். அந்த பகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக நானும் தொடர்ந்து கோரி வருகிறேன். அப்போதெல்லாம் அவர்கள் விடுவிக்கப்படவில்லை. கைதாகும் மீனவர்கள் விடுவிக்கும் பிரச்சினை மத்திய அரசின் அதிகார வரம்பில் தான் இருக்கின்றது. மத்திய அரசால்தான் அவர்களை விடுவிக்க முடியும் என்று சொல்கிறோம்.
அப்போதெல்லாம் செய்யாமல் தேர்தல் வருகின்ற போது மட்டும் மீனவர்கள் மீது இந்த அரசிற்கு பாசம் வருகின்றது. அதிலும், மீனவர்கள் விடுவிக்கப்படும்போது அவர்களின் படகுகள் விடுவிக்கப்படுவதில்லை. கடந்த காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் கைது செய்யப்பட்ட மீனவர்கள் விடுவிக்கப்படும்போது படகுகளும் சேர்த்து விடுவிக்கப்பட்டன. படகுகள் தான் மீனவர்களின் வாழ்வாதாரம். படகுகள் இல்லாமல் இங்கு வந்து தொழில் செய்வதற்கு முடியாத நிலை இருக்கின்றது.
தமிழக அரசு அங்கு சிறைபிடிக்கப்பட்ட ஒவ்வொரு படகுகளுக்கும் தலா ரூ.5 லட்சம் வீதம் நிவாரண உதவி வழங்கியிருக்கின்றது. காணாமல் போன மீனவர்களுக்கு தலா ரூ.2 லட்சம் ரூபாய் தற்போது வரை வழங்கி இருக்கின்றார்கள். இதுபோல், மத்திய அரசின் சார்பில் எந்த நிதியும் அவர்களுக்கு வழங்கப்படவில்லை. படகுகளும் மீட்கப்படுவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்படி மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யாத அரசாக இந்த அரசு இருக்கின்றது.
மீனவர்கள் கைது செய்யப்படும் பொழுது உடனடியாக இந்த அரசால் அவர்களை விடுவிக்க முடியும் என்பதை கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு மத்திய நிதியமைச்சர் சொல்லி இருக்கிறார்கள். அதைத்தான் நாங்கள் தொடர்ந்து சொல்கிறோம். மீனவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள். அவர்கள் கைது செய்யப்படும் பொழுது உடனடியாக விடுவிக்க வேண்டும். அவர்கள் பிரச்சினையின்றி நிரந்தரமாக மீன் பிடிப்பதற்கான நிலையை ஏற்படுத்த வேண்டும்” என்றார்.