விராட் கோலி, பிசிசிஐ இடையே என்ன பிரச்சனை? எப்போது மீண்டும் திரும்புவார்?

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டியில் முதல் இரண்டு போட்டிகளில் விராட்கோலி விளையாடவில்லை. தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் விடுப்பு எடுத்து கொண்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில், மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு அணியுடன் அவர் இணைவார் என கூறப்பட்டது. ஆனால், மூன்றாவது மற்றும் நான்காவது டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியில் விராட் கோலி விளையாடமாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு பதிலாக இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க பிசிசிஐ முடிவு செய்திருப்பதாகவும் தெரிகிறது.

விராட் கோலி ஏன் விளையாடவில்லை

தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடர் முடிந்ததும் இந்தியா திரும்பிய விராட் கோலி, தனிப்பட்ட காரணங்களுக்காக இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து ஓய்வு வேண்டும் என கேட்டுள்ளார். அதாவது அவரது மனைவி அனுஷ்கா சர்மா இப்போது கர்ப்பமாக இருப்பதால் அவருடன் இருக்க விராட் கோலி இந்த விடுப்பை எடுத்துள்ளார். விரைவில் விராட் கோலி – அனுஷ்கா சர்மா தம்பதிக்கு விரைவில் இரண்டாவது குழந்தை பிறக்கப்போகிறது. ஆனால் இதனை விராட் கோலி வெளியில் சொல்லவில்லை. குடும்பத்தினருடன் நேரம் செலவிட்ட பிறகு மீண்டும் இந்திய அணியுடன் சேர திட்டமிட்டிருந்தார்.

பிசிசிஐ எடுத்திருக்கும் முடிவு என்ன?

விராட் கோலி இல்லாமலேயே இந்திய அணி முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடிவிட்டது. முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வியும், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றியும் பெற்றுள்ளது. அதனால், விராட் கோலியை இந்த தொடரில் மேற்கொண்டு விளையாட வைக்க பிசிசிஐக்கு விருப்பம் இல்லையாம். அவருக்கு பதிலாக  இளம் வீரருக்கு வாய்ப்பு கொடுக்க திட்டமிட்டுள்ளதாம். இது குறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. அடுத்ததாக நடைபெற இருக்கும் ராஜ்கோட் மற்றும் ராஞ்சியில் விளையாடும் டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியை பிசிசிஐ இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. இருப்பினும் விராட் கோலிக்கு வாய்ப்பு மறுக்கப்படுவது குறித்த தகவல் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒருவேளை விராட் கோலி இடத்துக்கு இளம் வீரருக்கு வாய்ப்பு கொடுத்தால் அடுத்தடுத்த தொடர்களில் விராட் கோலியின் இடம் இந்திய அணியில் கேள்விக்குறியாகும். 

நாசர் ஹூசைன் மகிழ்ச்சி

விராட் கோலி இந்திய அணியில் இல்லாதது குறித்து பேசியிருக்கும் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹூசைன், இது இந்திய அணிக்கு இழப்பு என்றாலும், இங்கிலாந்து அணிக்கு குட் நியூஸ் என தெரிவித்துள்ளார். சுமார் 15 ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட் போட்டி விளையாடி வரும் விராட்  கோலி முக்கியமான தருணங்களில் குடும்பத்துடன் நேரம் செலவிட விரும்புவதில் தவறில்லை. அவருக்கு பதிலாக நல்ல பிளேயர் இந்திய அணிக்குள் வருவார். ஏனென்றால் ஏராளமான வீரர்கள் வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள் என நாசர் ஹூசைன் கூறினார்.  

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.