வேலை வேலை வேலை… லீவு நாள்களிலும் வேலை, ஆபிஸ் நாள்களிலும் வேலை, உண்டு எழுந்து உறங்கி என முழு நாளில் முக்கால்வாசி நேரத்தை ஆபிஸில் கழிக்கும் நிலைமை தான் இங்கு பலருக்கும் இருக்கிறது. இதை தாண்டி விடுமுறையில் சொந்த ஊருக்கோ, வெளியிலோ சென்றால் கூட அலுவலகத்தில் இருந்து அழைப்பு வந்துவிடும்.
அதை எடுக்கவும் முடியாது, எடுக்காமல் இருக்கவும் முடியாது. அழைப்பை எடுக்கவில்லை என்றால் ஏன் எடுக்கவில்லை என ஆபிஸ் சென்றதும் விளக்கமளிக்க வேண்டும், எடுத்துவிட்டால் சொல்லும் வேலையைச் செய்ய வேண்டும்.

மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் இஎம்ஐ, லோன், கடன், பொறுப்பு என அனைத்தும் கண்முன்னே நிழலாட ஆபிஸில் இருந்து வரும் அழைப்பை எடுத்துவிடுவோம். இது தான் ஆபிஸில் பணிபுரியும் பலரின் சூழல்…
ஆனால், ஆபிஸில் இருந்து வரும் தொலைபேசி அழைப்புகள், மெயில், மெசேஜ் இவற்றை உங்களால் புறக்கணிக்க முடிந்தால் எப்படி இருக்கும். இதனை தான் `ரைட் டு டிஸ்கனெக்ட்’ (Right to Disconnect) சட்டம் சொல்கிறது. தொழிலாளர்களின் நலன் கருதி மனித உரிமையை பாதுகாக்கும் நோக்கத்தோடு இந்த சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
இதன்படி ஒருவரின் அலுவலக நேரத்திற்கு பிறகு வரும் அழைப்புகள், மெயில், மெசேஜ் போன்றவற்றை துண்டிக்க முடியும். பணி நேரம் முடிந்த பின்னரும் இப்படி ஊழியர்களுக்கு அழைப்பு விடுக்கும் நிறுவனங்கள் மீது சாத்தியமான தண்டனையும் வழங்கப்படும்.
சில ஐரோப்பிய நாடுகளில் இந்த சட்டம் இருந்தாலும் ஆஸ்திரேலியா விரைவில் இதனை நடைமுறைப்படுத்த உள்ளதாகக் கூறியுள்ளது. மத்திய – இடது தொழிலாளர் அரசாங்கத்தால் தொழில்துறை உறவுகள் சட்டத்தின் ஒரு பகுதியாக இந்த சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

விரைவில் இந்த சட்டம் நடைமுறை படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் பட்சத்தில் ஒரு ஊழியரின் வேலை நேரம் அல்லாத சமயங்களில் அலுவலகத்தில் இருந்து அழைப்புகளையும் மெசேஜ்களையும் படிக்காமல் இருக்கவும் பதிலளிக்காமல் இருக்கவும் அனுமதி உள்ளது.
“தொழிலாளர்களின் டிஸ்கனெக்ட் உரிமையை வென்றதன் மூலம், அந்த நேரம் தேவைப்படும் மில்லியன் கணக்கான மக்களுக்கு வார இறுதியை நாங்கள் மீட்டெடுத்துள்ளோம்” என்று பசுமைக் கட்சியின் தலைவர் ஆடம் பேண்ட் அறிக்கையில் கூறியுள்ளார்.
வேலை முடிந்த பின்னரும் அலுவலகத்தில் இருந்து உங்களுக்கு வேலை செய்ய சொல்லி அழைப்புகள் வருமா?… கமென்டில் சொல்லுங்கள்!