மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டதில் இருந்து அந்த அணிக்குள் சலசலப்பு எழுந்துள்ளது. ரோகித் சர்மாவிடம் எதையும் ஆலோசிக்காமல் குஜராத் அணியிடம் பேசி ஹர்திக் பாண்டியாவை வாங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி, ஐபிஎல் ஏலம் முடிந்தவுடன் அவரை கேப்டனாக அறிவித்தது. இது ரோகித் சர்மாவுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. அவர் எந்த ரியாக்ஷனும் கொடுக்கவில்லை என்றாலும் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பு மாற்றம் குறித்து எந்த தகவல் வந்தாலும் அதனை ரோகித் சர்மாவின் மனைவி ரித்திகா உடனடியாக ரியாக்ஷன் கொடுத்துக் கொண்டிருக்கிறார். மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பு மாற்றம் அறிவிப்பு வெளியான உடனே தன்னுடைய அதிருப்தியை வெளிப்படுத்தினார் ரித்திகா.
அண்மையில் மார்க் பவுச்சர் இதுகுறித்து பேசும்போது, மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பு மாற்றம் என்பது முழுக்க முழுக்க கிரிக்கெட் தொடர்பான முடிவு, அணியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட முடிவு. மும்பை இந்தியன்ஸ் அணியில் மேற்கொள்ள வேண்டிய மாற்றத்துக்கான சரியான நேரம் இது என்பதால் கேப்டன் பொறுப்பு ரோகித் சர்மாவிடம் இருந்து ஹர்திக் பாண்டியாவிடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. மற்றபடி ரோகித் சர்மா தரமான பிளேயர். ஆனால் அவருடைய பேட்டிங் கடந்த சில ஆண்டுகளாக எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. அவர் மீது இருக்கும் அழுத்தம் காரணமாக இப்படி இருந்திருக்கலாம். இப்போது கேப்டன் பொறுப்பு அவரிடம் இல்லை.
அதனால் ஒரு பிளேயராக தன்னுடைய முழு திறமையையும் வெளிப்படுத்த ரோகித் சர்மாவால் முடியும். சுதந்திரமான ஆட்டத்தை அவர் வெளிப்படுத்துவார் என நாங்கள் நம்புகிறோம் என பவுச்சர் கூறினார். இந்த பேட்டியை பார்த்த ரோகித் சர்மாவின் மனைவி ரித்திகா, இந்த பேட்டியில் நிறைய பிழைகள் இருப்பதாக கூறினார். அவரின் இந்த கருத்து மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது. தன்னிடம் இருந்து கேப்டன் பொறுப்பு பறிக்கப்பட்டதில் இருந்து ரோகித் மும்பை இந்தியன்ஸ் அணி மீது அவர் அப்செட்டாக இருப்பதும் தெரிந்தது. இந்த சூழலில் ரோகித் சர்மாவை சோஷியல் மீடியாவில் அன் பாலோ செய்திருக்கிறார் ஹர்திக் பாண்டியா.
ரோகித் சர்மாவுக்கும், பாண்டியாவுக்கும் இடையே உரசல் இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்டது. குஜராத் அணிக்கு செல்வதற்கு முன்பு மும்பை இந்தியன்ஸ் அணியிடம் பேசிய பாண்டியா, தனக்கு கேப்டன் பொறுப்பு கொடுக்குமாறும், அணியை இன்னும் சிறப்பாக வழிநடத்துவேன் என்றும் தெரிவித்துள்ளார். அது ரோகித் சர்மாவுக்கு தெரியவரும்போது பாண்டியா மீது அப்செட்டானார். இதனைத் தொடர்ந்து புதிதாக ஐபிஎல் போட்டிக்குள் நுழைந்த குஜராத் அணிக்கு சென்றார் பாண்டியா. அவரது சகோதரர் குருணால் பாண்டியாவும் லக்னோ அணிக்கு சென்றார். இருவருமே ரோகித் சர்மா மீது இருந்த அதிருப்தி காரணமாகவே மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து வெளியேறினர். இப்போது பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணிக்கு திரும்பியிருப்பதால், ரோகித் சர்மா என்ன செய்யப்போகிறார் என்ற கேள்வி எழுந்திருக்கிறது.