சென்னை: விவசாய பெருமக்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு, திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்ட விவசாயப் பெருமக்களின் நலன் கருதி பயிரிடப்பட்டுள்ள சம்பா நெற்பயிரினைக் காத்திட மேட்டூர் அணையிலிருந்து ஒரு நாள் கூடுதலாக நாளை (பிப்.10) வரை தண்ணீர் திறக்கலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நடப்பு ஆண்டில் வடகிழக்குப் பருவமழை பொழிவு குறைவாக பெய்த காரணத்தாலும், காவிரி நதி நீர் பற்றாக்குறையாலும், டெல்டா மாவட்டங்களில் பயிரிடப்பட்ட சம்பா பயிர்கள் பாதிக்கப்பட்டு வருவதால் மேட்டூர் அணையிலிருந்து நீர் திறந்து விடக்கோரி விவசாய பெருமக்களிடமிருந்து தமிழக முதல்வருக்கு கோரிக்கை கிடைக்கப்பெற்றதன் அடிப்படையில் விவசாய பெருமக்களின் நலன் கருதி நெற்பயிரினைக் காத்திட மேட்டூர் அணையிலிருந்து 2 டிஎம்சி தண்ணீரை பிப்.3-ம் தேதி முதல் திறந்து விட தமிழக முதல்வரால் உத்திரவிடப்பட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து பிப்.3 அன்று 6000 கனஅடியும் பிப்.4 முதல் பிப்.9 வரை நாளொன்றுக்கு 5000 கனஅடி வீதமும் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு மேற்கொள்ளப்பட்டது. தற்போது மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீர் போதுமான அளவு காவிரி டெல்டா பகுதியில் உள்ள பாசன நிலங்களுக்கு கடைமடை வரை செல்வதற்கு ஏதுவாக கால நீட்டிப்பு செய்யுமாறு விவசாய பெருமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விவசாய பெருமக்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு, திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்ட விவசாயப் பெருமக்களின் நலன் கருதி பயிரிடப்பட்டுள்ள சம்பா நெற்பயிரினைக் காத்திட மேட்டூர் அணையிலிருந்து ஒரு நாள் கூடுதலாக அதாவது பிப்.10 வரை தண்ணீர் திறக்கலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே விவசாயப் பெருமக்கள் இப்பாசன நீரினை சிக்கனமாகப் பயன்படுத்தி சம்பா நெற்பயிரைப் பாதுகாத்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.