இந்தியன் பிரீமியர் லீக்கின் (IPL) 17வது சீசனுக்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி ரோஹித் சர்மாவை கேப்டன் பதவியில் இருந்து நீக்கி, ஹார்டிக் பாண்டியாவை புதிய கேப்டனாக நியமித்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இது குறித்து அணி நிர்வாகம் கொடுத்துள்ள விளக்கத்தில், மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ரோஹித் சர்மாவின் மீதான அழுத்தத்தைக் குறைக்கவும், அவரது பேட்டிங் செயல்திறனை மேம்படுத்தவும் இந்த முடிவை எடுத்ததாக தெரிவித்துள்ளது. 2023 சீசனில் ரோஹித் சர்மாவின் பேட்டிங் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இல்லை. 16 போட்டிகளில் 20 சராசரியில் 332 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
பயிற்சியாளர் பவுச்சர் விளக்கம்:
மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளர் மார்க் பவுச்சர், ரோஹித் சர்மா ஒரு சிறந்த தலைவர் என்றாலும், அவரது பேட்டிங் பாதிக்கப்படுவதாக கவலை தெரிவித்தார். கேப்டன் பொறுப்பிலிருந்து விடுபட்ட பின்னர் ரோஹித் சர்மா பேட்டிங்கில் சிறப்பாக செயல்படுவார் என்று நம்புவதாகவும் கூறினார். அவர் மீது எந்த அழுத்தமும் இல்லாமல் இருக்கும்போது, ஒரு பிளேயராக சிறந்த ஆட்டத்தை விளையாடுவார் என நம்புகிறோம். அந்தளவுக்கான ஆட்டத்திறன் அவரிடம் இருக்கிறது என பவுச்சர் தெரிவித்துள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் எதிர்கால திட்டம்:
மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் எதிர்காலத்தை மனதில் வைத்து ஹார்டிக் பாண்டியாவை புதிய தலைவராக நியமித்துள்ளது. 2023 சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அணியை IPL பட்டத்திற்கு வழிநடத்திய ஹார்டிக் பாண்டியா, திறமையான இளம் வீரர் மட்டுமல்ல, ஒரு சூப்பர் கேப்டன் என்பதையும் நிரூபித்துள்ளார். ஏற்கனவே அவர் மும்பை அணிக்காக விளையாடிய காரணத்தால் மீண்டும் பல கோடி ரூபாய் செலவழித்து பாண்டியாவை மும்பை அணிக்கே அழைத்து வந்திருக்கின்றனர்.
பிளேயிங் லெவனில் வாய்ப்பு கேள்விக்குறி
இருப்பினும் பாண்டியா கேப்டன் பொறுப்பை ஏற்றதை மும்பை அணியில் இருக்கும் முன்னணி பிளேயர்களே ஏற்கவில்லை. அவர்களுக்கு அதிருப்தி இருக்கிறது. பும்ரா மற்றும் சூர்யகுமார் யாதவ் தங்களின் எதிர்ப்பை மறைமுகமாக பதிவு செய்துவிட்டனர். ஆனால், ஹர்திக் பாண்டியா தான் அடுத்த கேப்டன் என்பதில் மும்பை அணி நிர்வாகம் உறுதியாக இருக்கிறது. ரோகித் சர்மா தலைமையில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 IPL பட்டங்களை வென்றது. இருப்பினும், அவரது சமீபத்திய பேட்டிங் புள்ளி விவரங்கள் கவலைக்குரிய விஷயமாக இருந்தது. இதனை பார்த்த அந்த அணி நிர்வாகம், ஹர்டிக் பாண்டியா அணியை வெற்றிகரமாக வழிநடத்த முடியும் என்று நம்பி கேப்டன் பொறுப்பை அவரிடம் வழங்கியுள்ளது. பேட்டிங் ஆடாவிட்டால் ரோகித் பிளேயிங் லெவனில் இருந்தே தூக்கப்படுவார் என்பது உறுதியாகியுள்ளது.