விஜய்யின் அரசியல் என்ட்ரிதான் தற்போது தமிழ்நாட்டின் ஹாட் டாபிக். ‘தமிழக வெற்றி கழகம்’ கட்சி பெயர் தொடங்கி, விஜய்யின் கொள்கைகள் என்னவாக இருக்கும் என்பது வரை பெரும் விவாதமே நடந்து வருகிறது.
குறிப்பாக, கட்சியின் அந்தப் பெயருக்கான காரணத்தை கீழடியைவிட இன்னும் கீழே இறங்கி தோண்டி எடுத்துக் கொண்டாடி வருகிறார்கள் விஜய் ரசிகர்கள். ‘தமிழக வெற்றி கழகம்’ எனப் பெயர் வைத்ததற்குக் காரணமே, அவரது அப்பா எஸ்.ஏ.சி இயக்கத்தில் 1984-ம் ஆண்டு வெளியான ‘வெற்றி’ படம்தான் என்கிறார்கள். காரணம், அந்தப் படத்தில்தான் முதன் முதலாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் விஜய். அதில் தொடங்கிய பயணம்தான் இன்று அவர் வெற்றிகரமான நடிகராக இருக்கிறார். அதனால் கட்சி பெயரையும் ‘வெற்றி’ என்று வைத்திருப்பதால் ‘அடுத்த முதல்வர் எங்கள் தளபதிதான்’ என்கிற ரேஞ்சில் ரசிகர்கள் கொண்டாடிக்கொண்டிருக்க, விஜய் அறிமுகமான ‘வெற்றி’ படத்தில் நடித்த ஒய்.ஜி மகேந்திரனிடம் பேசினேன்.

“இன்னைக்கு நாட்ல மிகப்பெரிய பிரச்னையா பார்க்கப்படுறது தம்பி விஜய் அரசியலுக்கு வரலாமா, கூடாதாங்கிறதுதான். இந்தியா ஒரு ஜனநாயக நாடு. மக்களுக்கு உண்மையான சேவை செய்யும் நோக்கத்தோட விருப்பமும் ஆர்வமும் உள்ள யாரா இருந்தாலும் அரசியலுக்கு வரலாம். குறிப்பா, சினிமாவுலருந்து அரசியலுக்கு வந்து சாதிச்சவங்கள்ல தமிழ்நாடு இந்தியாவுக்கு முன்மாதிரி. நிறைய பேர் அரசியலுக்கு வந்து ஜெயிச்சும் காட்டியிருக்காங்க. அறிஞர் அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா எல்லோருக்கும் சினிமா பின்புலம்தான். அதேநேரம், எளிமையான பின்னணியிலிருந்து வந்த காமராஜரையும் மக்கள் ஏத்துக்கிட்டாங்க. காமராஜரும் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தியிருக்காரு.
இந்தத் தலைவர்கள் போலவே, சேவை செய்யும் நோக்கத்தோடதான் விஜய் இப்போ அரசியலுக்கு வந்திருக்கிறதா நான் பார்க்குறேன். அவரோட அறிக்கையிலும் அப்படித்தான் குறிப்பிட்டிருக்கார். அதனால, விஜய் அரசியலுக்கு வருவதை நான் வரவேற்று வாழ்த்துறேன். ஏன்னா, விஜய் தமிழ் சினிமாவுல உச்ச நடிகராக இருக்கார். அதுவும், நன்கு பணம் சம்பாதிக்கும்போதே வந்திருக்காரு. சினிமாவுல மார்க்கெட் போய் ஓய்ந்துட்டப்பிறகு, அவர் அரசியலுக்கு வரல. நல்லா சம்பாதிச்சிட்டிருக்கும்போதே, வந்திருக்காருன்னா அவருக்கு அரசியல்ல பணம் சம்பாதிக்கணும்ங்கிற நோக்கம் இல்லன்னு தெரியுது. இதை நான் பெரிய விஷயமா பார்க்குறேன்.

அதுமட்டுமில்லாம, அரசியல் வந்ததும் சினிமாவை முழுமையா விட்டுடுவேன்னும் சொல்லிருக்கார். இது ரொம்ப நல்ல விஷயம். சினிமாவுல இருந்து அரசியலுக்கு வர்றவங்க எம்.ஜி.ஆரை ஃபாலோ பண்ணணும். அரசியலுக்கு வந்ததும் எம்.ஜி.ஆர் சினிமாவை விட்டுட்டார். ஜெயலலிதா மேடமும் அரசியலை விட்டுட்டாங்க. விஜய்யும் இவங்க பாணியில முழுமையா அரசியல்ல ஈடுபடுவேன்னு சொல்லியிருக்கிறது நல்ல அறிகுறியாவும் உயர்ந்த குறிக்கோளாவும் தெரியுது.
அரசியல்ல விஜய் ஜெயிப்பாரா? மாட்டாராங்கிறதெல்லாம் அடுத்த விஷயம். அதை 2026-ல பார்த்துக்கலாம். ஆனா, செல்வாக்குள்ள ஒரு முன்னணி நடிகர் அரசியலுக்கு வந்து மக்களுக்குச் சேவையில ஈடுபட விரும்பறார். அவருக்கு வாய்ப்புக் கொடுக்கிறதுல எந்தவித தப்பும் இல்ல. விஜய் அரசியல்ல ஜெயிக்க என் வாழ்த்துகள். ஆல் தி பெஸ்ட் விஜய்” என்று முகமலர்ச்சியுடன் வாழ்த்தியவரிடம்,
“நீங்கள் நடித்த `வெற்றி’ படத்தில்தான் விஜய் அறிமுகமானார். அந்த நினைவுகள் குறித்து பகிர்ந்துகொள்ள முடியுமா?” என்றோம். உற்சாகமாகி பேசத் தொடங்கினார்…
“விஜய் நான் நடிச்ச ‘வெற்றி’ படத்துலதான் அறிமுகமானார். அந்தப் படத்துல விஜயகாந்த் சார்தான் ஹீரோ. விஜய் சின்ன விஜயகாந்த்தா நடிச்சிருந்தார். படத்துல எனக்கும் விஜய்க்கும் சீன்ஸ் கிடையாது. விஜயகாந்த் வரும்போதுதான் என் காட்சிகள் வரும். ஆனா, படம் வெளியானப்போ விஜய் நடிப்பைப் பார்த்தேன். சூப்பரா நடிச்சிருந்தார். அவரோட நடிப்பைத்திறமையும் உழைப்பும்தான் இன்னைக்கு முன்னணி நடிகராக்கியிருக்கு.

‘வெற்றி’ பட ஷூட்டிங் முருகாலயா ஸ்டூடியோவுல நடந்துக்கிட்டிருக்கும்போது, மதிய லஞ்சுக்கு எஸ்.ஏ.சி சார் வீட்டுக்கு அன்பா கூப்பிட்டுப் போவார். அப்போ, விஜய் ஸ்கூல்ல இருந்து வந்து சாப்பிட்டுப் போவார். என்னைப் பார்த்ததும் ரொம்ப மரியாதையா, ‘Good Afternoon’ அங்கிள்னு விஷ் பண்ணிட்டு, கூட உட்கார்ந்து சாப்பிடுவார். அப்போ, இருந்த க்யூட் லிட்டில் பாய் விஜய், இப்போவும் எனக்கு ஞாபகத்துல இருக்கார். ரொம்ப டீசன்ட்டானவர் விஜய்” என்கிறார் பழைய நினைவுகளுடன்.