சினிமாவில் வாய்ப்பு தேடுபவர்களுக்காகப் பிரத்யோகமாக உருவாக்கப்பட்டுள்ளது ‘ஸ்டார் டா (StarDa)’ என்ற செயலி.
இதன் பிராண்ட் அம்பாசிடராக ஜி. வி.பிரகாஷ் குமார் பொறுப்பேற்றிருக்கிறார். இன்று, இதன் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் ஜி.வி.பிரகாஷ்குமார், அருண்ராஜா காமராஜ், ரமேஷ் திலக், தனஞ்ஜெயன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர். இதில் பேசிய நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ், ‘கோடி கோடியாகக் கொட்டிக் கொடுத்தாலும் சூதாட்ட விளம்பரங்களில் நடிக்க மாட்டேன்’ என்று பேசியுள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள அவர், “குளிர்பான விளம்பரங்கள், சூதாட்ட விளம்பரங்கள் போன்றவற்றிற்கு கோடி கோடியாகக் கொட்டிக் கொடுத்தாலும் நடிக்கமாட்டேன். விளையாட்டு சம்பந்தமான விளம்பரங்களில் நடிக்கலாம் என்று நினைத்தேன். பேட்மிட்டன் போன்ற விளையாட்டுகளுக்கு பிராண்ட் அம்பாசிடராக இருந்தேன்.
அந்தவகையில் திறமையானவர்களுக்கு சினிமா வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் இந்த ‘ஸ்டார்டா’ எனும் செயலை வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறன். இதன் பிராண்ட் அம்பாசிடராக பொறுப்பேற்றிருப்பதிலும் மகிழ்கிறேன். திறமையான கலைஞர்களுக்கு வாய்ப்புகளை உருவாக்கித் தரும் தளமாக இந்த ‘ஸ்டார்டா’ இருக்கும் என எதிர்பாக்கிறேன்.
நிறைய பேரின் வாழ்க்கையில் திருப்பத்தை ஏற்படுத்துகின்ற இந்தத் தளத்தில் நானும் ஒரு பகுதியாக இருக்க விரும்பினேன். அதனால் இதில் பிராண்ட் அம்பாசிடராகப் பொறுப்பேற்றிருக்கிறேன். இந்த ‘ஸ்டார் டா’ தளம் மூலம் நிறைய பேருக்கு வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். நானும் என்னுடைய படங்களுக்கு இந்தத் தளத்தில் உள்ள திறமைசாலிகளைத் தேர்வு செய்து வாய்ப்பளிக்க முயற்சிக்கிறேன். புதிய கலைஞர்களுக்கு இந்தத் தளம் நல்லதொரு வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் என உறுதியாக நம்புகிறேன்” என்றார்.
அதுமட்டுமின்றி, “இப்போது இருக்கும் பெரிய இயக்குநர்களின் அறிமுகப் படங்களில் பணியாற்றி உள்ளேன். வெற்றிமாறன், அட்லி, ஏ.எல். விஜய் போன்ற இயக்குநர்களின் அறிமுகப்படங்களில் பணியாற்றியிருக்கிறேன். எப்போதும் திறமைக்கு வாய்ப்பளிக்க வேண்டும்” என்று கூறினார்.