Lal salaam: `ஐஸ்வர்யா உருவம் பதித்த கொடி' -ரகசியம் சொல்லும் நிர்வாகிகள்

சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகள் ஐஸ்வர்யா இயக்கியுள்ள படத்தில் ரஜினி சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். மிகவும் எதிர்பார்ப்பை உருவாக்கிய இந்தத் திரைப்படம், இன்று திரைக்கு வந்துள்ளது.

இந்நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள ரஜினி ரசிகர்கள் இந்தத் திரைப்படத்தை உற்சாகமாக வரவேற்று, தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில்தான், ரஜினி ரசிகர் மன்ற திருச்சி மாவட்ட நிர்வாகிகள் செய்த காரியம், தமிழ்நாடு அளவில் பலரையும் பேச வைத்துள்ளது. ரஜினி ரசிகர் மன்ற திருச்சி மாவட்டச் செயலாளர் கலீல் ஆலோசனையின் பேரில், ரஜினி ரசிகர் மன்ற மாவட்ட துணைச் செயலாளர் ‘ராயல்’ ராஜூ வடிவமைத்துள்ள அந்தக் கொடிதான், தற்போது லைம்லைட்டுக்குள் வந்திருக்கிறது.

கொடி

ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவின் உருவம் பதிக்கப்பட்ட அந்தக் கொடியில், ‘சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்’ என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது. லால்சலாம் திரைப்படம் வெளியான தியேட்டர் முன்பு அந்தக் கொடியை ஏந்தி வந்ததோடு, அங்கு திரண்டிருந்த நூற்றுகணக்கான ரசிகர்கள் முன்பு அந்த கொடியைக் காண்பித்து சிறப்பித்தனர். இந்நிலையில், சிவப்பு, மஞ்சள், பச்சை வண்ணங்களுடன் கூடிய கொடியை ஏந்தி வந்த ரசிகர்களால் கட்சி தொடங்க முன்னோட்டமா என்ற பரபரப்பும் பற்றிக்கொண்டுள்ளது.

இந்நிலையில், அந்தக் கொடியை வடிவமைத்த ரஜினி ரசிகர் மன்றத்தின் திருச்சி மாவட்ட துணைச் செயலாளர் ‘ராயல்’ ராஜூவிடம் பேசினோம்.

“எங்கள் தலைவரின் மகள் இயக்கிய படம் என்பதால், அதனைக் கொண்டாடும் வகையில் வித்தியாசமாக ஏதாவது செய்ய நினைத்தோம். அதற்காகத்தான், இந்தக் கொடியை வடிவமைத்தேன். இந்தப் படம் மூலம் எங்கள் தலைவரை ஐஸ்வர்யா அவர்கள் ஒரு புரட்சிகரமான நடிகராக காட்ட முயற்சித்ததால், அவர் படத்தை வைத்து கொடியைத் தயார் செய்தோம். அதேபோல், லால்சலாம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தலைவர், ‘லால் என்றால் புரட்சி என்று அர்த்தம். புரட்சியின் வண்ணம் சிவப்பு’ என்று பேசினார். அதனால், அவர் சொன்னதுபோல் புரட்சிகரமான கருத்தை தைரியமாக ஐஸ்வர்யா எடுக்க முன்வந்ததால், சிவப்பு நிறத்தைக் கொடியில் சேர்த்தோம்.

கொடி கொடியுடன் ‘ராயல்’ ராஜூ

அதேபோல், படத்தை நேர்த்தியாக தயாரித்துள்ளதால், தலைவர் சொல்லை நிறைவேற்ற நாங்கள் எப்போதும் தயார் நிலையில் உள்ளதாலும், அதை உணர்த்தும்விதமாக மஞ்சள் வண்ணத்தைச் சேர்த்தோம். தொடர்ந்து, சிறப்பான படத்தை இயக்கியதன் மூலம் வெற்றி இயக்குநர்களின் பட்டியலில் சேர்ந்துவிட்ட ஐஸ்வர்யாவை வாழ்த்தும்விதமாக, ‘வெற்றி’ என்பதை குறிக்க ஏதுவாக பச்சை வண்ணத்தைக் கொடியில் சேர்த்தோம். மொத்தத்தில், எல்லா புரட்சிகளுமே விரும்புவது, ‘அமைதியையும், சமாதானத்தையும் தான். அதனால், அதை உணர்த்தும்விதமாக கொடியில், ‘சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்’ என்ற வாசகத்தைப் பொறித்தோம். தலைவர் படத்தைக் கொண்டாடி, அந்தப் படத்தை இயக்கிய அவரின் மகளுக்கு சிறப்பு செய்யத் தான் இந்தக் கொடியை வடிவமைத்தோம். மற்றபடி, இதன் பின்னணியில் எந்த அரசியலும் இல்லை. அரசியல் நோக்கத்துக்காக இந்த முயற்சியை செய்யவில்லை” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.