Suriya's First Vikatan Interview: 'நானும், விஜய்யும் ஒரே பேட்ச் மேட்' – சூர்யாவின் முதல் நேர்காணல்

அரசியலில் ‘ இளைஞன் ‘ என்பதற்கான வயது உச்சவரம்பு அதிகரித்துக் கொண்டே போக, சினிமாவிலோ அது குறைந்து கொண்டே… தமிழ்த் திரையுலகின் லேட்டஸ்ட் ஹீரோ சூர்யா! 23 வயசு ‘ சிவக்குமாரர்! ‘ ‘ நேருக்கு நேர் ‘ சினிமாவை ஒரு கை பார்க்க வந்துவிட்டார்….

அப்பாவைப் போல வேறு ஏதாவது ஆர்வமுண்டா..?

டென்னிஸ் பிடிக்கும். நீச்சல் பிடிக்கும். போட்டோகிராபியில் இன்ட்ரஸ்ட் இருக்கு. காலேஜ்ல படிக்கிறப்ப நிறைய போட்டோஸ் எடுத்திருக்கேன்….

சிவக்குமார், சூர்யா, கார்த்தி

காலேஜ்ல நீங்க, விஜய், அருண் குமார் நண்பர்களாமே…. அப்போ நடந்த சுவாரஸ்யமான நிகழ்ச்சி ஒண்ணு சொல்ல முடியுமா..?

நானும், விஜய்யும் ஒரே பேட்ச் மேட்ஸ். அருண்குமார், எங்களைவிட ரெண்டு செட் ஜூனியர். நாங்க ஒரு தடவை காலேஜ்ல ‘ கல்சுரல் ‘ ஆர்கனைஸ் பண்ணினோம். அப்போதான் விஜய்யும் நானும் நண்பர்களானோம். காலேஜ்ல எவ்வளவோ சேட்டையெல்லாம் பண்ணியிருக்கோம். ஆனா, அதெல்லாம் சொன்னா…. அப்பா அம்மால்லாம் படிப்பாங்களே….. ( லேசாக வெட்கத்துடன் ) சொன்னா நல்லாயிருக்காதே… ‘

 சரி, உங்களோட நெருங்கிய நண்பர் யார்…?. 

என்னோட நண்பர்கள் எல்லோருமே எனக்கு நெருக்கமானவர்கள் தான்…. அவங்கவங்களோட தனித்தன்மைக்காக எல்லாரையுமே எனக்குப் பிடிக்கும்… 

கேர்ள் ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்களா…?

கேர்ள் ஃப்ரெண்ட்ஸ்னு தனியா க்ளோஸா யாரும் கிடையாது. நண்பர்களோட அக்கா, தங்கைகள்… அப்புறம் சிம்ரனைக்கூட ஃப்ரெண்ட்ங்கிற முறையில் எனக்குப் பிடிக்கும்…..

சூர்யா, சிவக்குமார், விஜய்

முதல் இன்டர்வியூலே உங்கப்பாவிடம் ‘ ஹீரோயினைக் கட்டிப் பிடிச்சப்ப எப்படி இருந்துச்சு? ‘ னு கேட்டபோது, ‘ நெளிய வெச்சதா ‘ சொன்னாராம்… ( நாம் சொல்லச் சொல்ல, சூர்யாவின் முகம் வெட்கத்தில் சிவப்பேறுகிறது! ) சிம்ரனுடனான உங்கள் அனுபவம் எப்படி…?

( வெட்கம் சிரிப்பாக மாறி, கொஞ்ச நேரம் என்ன செய்வதென்று தெரியாமல் மௌனம்… ) பிறகு ” எல்லா ஸீனிலும் ‘ எப்படி நடிக்கிறது? ‘ னு சொல்லிக் குடுத்தாங்க. ஆனா, இந்த ஸீன்ல…. ( மீண்டும் முகத்தில் செம்மை பரவ… ) வஸந்த் சார் ‘ நீயாதான் நடிக்கணும்’னு சொல்லிட்டார். என்ன பண்றதுன்னே தெரியலே… ( கொஞ்ச நேர அமைதி ) அது… அப்புறம்… நடிப்பு தானேனு நடிச்சுட்டேன்….

நடிப்பு பத்தி அப்பா என்ன கற்றுக் கொடுத்தார்..?

‘வாக் எப்படியிருக்கணும்..? பார்வை எப்படியிருக்கணும்…? ‘ கிற மாதிரி நிறைய சொல்லிக் கொடுத்தார். ஆனா, அப்பாவோட சாயல் என் நடிப்புல வந்திடக் கூடாதுங்கிறதுல நான் ரொம்பக் கவனமா இருக்கேன்…

அப்பா காலத்துல ஹீரோக்கள் நீண்ட காலம் stand பண்ணினாங்க. இப்போல்லாம் ரெண்டு வருஷம்கூடத் தாங்கமாட்டேங்கறாங்க. கலையுலக மார்க்கண்டேயன் மகன் நீங்க… எப்படி stand பண்ணப் போறீங்க..? என்ன plan வெச்சிருக்கீங்க…?

ஆமா, முதல்ல அர்விந்த் சுவாமி வந்தார். அப்புறம் அப்பாஸ். இப்போதைய ட்ரெண்ட் அப்படி… மோகன் லால் மாதிரி வெரைட்டியா பண்ணணும். இப்போ ‘ நேருக்கு நேர்’ல நான் ஆக்ஷன் ஹீரோதான். வித்தியாசமான காரெக்டர்கள், கதையம்சமுள்ள படங்கள் கெடைச்சாதான் என்னாலயும் stand பண்ண முடியும். அப்பாவோட sincerity தான் எனக்கு வேதம் மாதிரி.

கரெக்ட் டைமுக்கு ஷூட்டிங் போறதிலேர்ந்து எல்லாத்து லயும் அப்பாவைத்தான் ஃபாலோ பண்றேன். ஆனா, எனக்குனு தனி ஸ்டைல் உண்டு. போகப் போக, மக்கள் எப்படி எதிர்பார்க்கறாங்கனு பார்க்கணும். அதுமாதிரி செய்யணும். அப்பாவுக்கு நண்பர்கள் குறைவு. அவ்வளவா கான்டாக்ட்ஸ் வெச்சுக்க மாட்டார். நான் நிறைய ப்ரெண்ட்ஸ் வேணும்னு நினைக்கிறேன். சாதாரணமா நான் வீட்டுலயே இருக்க மாட்டேன். எப்போ பார்த்தாலும் ப்ரெண்ட்ஸோடு சுத்திட்டுதான் இருப்பேன். வீட்டுலகூட ‘ நீ வீட்டை லாட்ஜ் மாதிரி யூஸ் பண்றே… சாப்பிடறதுக்கும் படுக்கறதுக்கும் மட்டும்தான் வர்றே? ‘ னு சொல்வாங்க….. ( சிரிக்கிறார் ) 

அப்படி எங்கதான் போவீங்க…?

ஆல் இண்டியா டூர் போவோம். டெல்லி, ஜெய்ப்பூர், புனே, கல்கத்தா, பாம்பேனு எல்லா இடமும் சுத்தியிருக்கேன். அதுல கோவாவும் ஜெய்ப்பூரும் எனக்கு ரொம்பப் பிடிக்கும். கோவா பீச்சுக்காக, ஜெய்ப்பூர் அந்தக் காலத்து ராஜாக்களின் monuments- க்காக..! அந்த அரண்மனைகளும் கட்டடங்களும் அற்புதமா இருக்கும்…

‘ சிகரெட் பிடிக்கக் கத்துக்கணும்… சண்டை, டான்ஸ் கத்துக்கணும்’னு வஸந்த் நிறைய கட்டளைகள் போட்டிருக்காராமே..?

ஆமா! சிகரெட் பிடிக்கச் சொன்னப்ப, ‘ சரி… எப்படியாவது ஏமாத்திடலாம்’னு பார்த்தேன். முடியலே…. கட்டாயம் ஸ்மோக் பண்ண வேண்டியதாயிட்டது. அப்புறம் கலா மாஸ்டர்கிட்ட சினிமா டான்ஸ் கத்துக்கிட்டிருக்கேன். சண்டை கத்துக்கறேன். குதிரையேற்றம் மாதிரி சில விஷயங்கள்….. அவ்வளவுதான். ஏற்கெனவே எனக்கு நீச்சல் தெரியும்….

‘ ஜிம்’முக்குப் போவீங்களா…?

ஸ்கூல்ல படிக்கும்போது டெய்லி போயிட்டிருந்தேன். காலேஜ்ல படிக்கும்போது சோம்பேறித்தனத்தால விட்டுட்டேன்…. இப்போ டெய்லி போறேன்….

அப்பாவோட பிஸினஸை நீங்கதான் பார்த்துக்கறீங்களா..?

ஆமா! காலேஜ் முடிச்சதும் கார்மெண்ட் எக்ஸ்போர்ட்ஸ் பிஸினஸ்தான் பண்ணிட்டி ருந்தேன். இப்போகூட ஷூட்டிங் இல்லாத டைம்ல அங்கே போயிடுவேன்….

 அப்பா சிவகுமார், நடிகர் சிவகுமார் – இருவரில் உங்களை மிகவும் கவர்ந்தவர் பார்..?

நடிக்க வர்றதுக்கு முன்னால, அப்பா சிவகுமாரைத்தான் ரொம்பப் பிடிக்கும். இப்போதான் ‘ நடிப்பு’ங்கிறது எவ்வளவு கஷ்டமான விஷயம்னு புரியுது. வஸந்த் சார் நடிக்கக் கூப்பிட்டப்போகூட, அப்பா என்ன சொன்னார் தெரியுமா..? ‘ உனக்குள்ளே நடிக்கணும்ங்கிற ஒரு fire இருக்கணும். மத்தவங்களை விட வித்தியாசமா செய்யணும். உனக்கே நடிக்கணுமனு தோணினா நடி’னுதான் சொன்னார்!

உங்களுக்குப் பிடிச்ச விஷயங்கள் என்னென்ன..?

தனியா கார்ல ரொம்ப தூரம் போகப் பிடிக்கும். Weekend- ல நண்பர்கள்கூடச் சுத்தப் பிடிக்கும். அப்புறம், கலர்ஸ்ல கறுப்பு, மஞ்சள், பிங்க் பிடிக்கும். சாப்பாட்டுல எதையுமே ஒதுக்க மாட்டேன். எல்லாமே பிடிக்கும்…..

உங்களுக்குப் பிடித்த நடிகர் யார்…?

கமலை அவரது performance- க்காகப் பிடிக்கும். ரஜினி ஸ்டைல் மற்றும் அவரோட மன உறுதிக்காகப் பிடிக்கும். எல்லாருக்குமே தனி ஸ்டைல் உண்டு…..

பிடித்த நடிகை…?

ம்… ( ஏறக்குறைய ஐந்து நிமிடங்கள் யோசித்தவர் ) இந்தியில் மாதுரி தீட்சித், தமிழ்ல கௌதமி, ராதிகா…. 

அப்போ சிம்ரன்..?

இப்போதானே நடிக்கிறேன்…. ஒரு ஃப்ரெண்ட்டா அவங்களைப் பிடிக்கும்!

தயாமலர்
படங்கள்: பொன். காசிராஜன்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.