குழந்தைகள் பிறந்தநாள் நம்பர் காம்பினேஷனில் Lottery; தந்தைக்கு அடித்த ஜாக்பாட்! – எவ்வளவு தெரியுமா?

பிக் டிக்கெட் அபுதாபி (Big Ticket) வாராந்திர டிராவில், 15 மில்லியன் திர்ஹம் (சுமார் ரூ.33 கோடி) வென்றிருக்கிறார், கேரளாவைச் சேர்ந்த 40 வயது இளைஞரான ராஜீவ் அரிக்கத். அபுதாபி அல் ஐனில், தன்னுடைய மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வரும் ராஜீவ், அங்கு கட்டடக்கலை நிபுணராகப் பணிபுரிந்து வருகிறார். இவர், கடந்த மூன்று ஆண்டுகளாகத் தொடர்ந்து லாட்டரி டிக்கெட்டுகளை வாங்கி வந்திருக்கிறார். மூன்று ஆண்டுகளாக லாட்டரி வாங்கி வரும் ராஜீவ் அரிக்கத்துக்கு, முதன்முறையாக… அதுவும் மிகப் பெரிய தொகை, லாட்டரியில் பரிசாக விழுந்திருக்கிறது. இந்த வெற்றி அவருக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஏனென்றால், அந்த லாட்டரி எண், அவரின் குழந்தைகளின் பிறந்தநாள் தேதியின் காம்பினேஷன்.

“நான் 10 ஆண்டுகளுக்கும் மேலாக அல் ஐனில் வசிக்கிறேன். கடந்த 3 ஆண்டுகளாக லாட்டரி டிக்கெட் வாங்குகிறேன். லாட்டரியில் வெற்றி பெறுவது இதுவே முதன்முறை. இந்த முறை நானும் என் மனைவியும் 7 மற்றும் 13 எண்கள் கொண்ட டிக்கெட்டுகளைத் தேர்ந்தெடுத்தோம். இது எங்கள் குழந்தைகளின் பிறந்த தேதிகள். இரண்டு மாதங்களுக்கு முன்பு, அதே கலவையுடன் விஸ்கர் மூலம் 1 மில்லியன் திர்ஹம்ஸை நான் தவறவிட்டேன். ஆனால், இம்முறை அதிர்ஷ்டம் என் பக்கமாக இருந்திருக்கிறது” என்கிறார் ராஜீவ், உற்சாகம் பொங்க.

வெற்றி பெற்ற பரிசுத் தொகையை, ராஜீவ் மற்ற 19 பேருடன் சமமாகப் பிரித்துக் கொண்டு, தனது வெற்றியைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறார்.

“டிராவிற்கான மொத்தம் ஆறு டிக்கெட்டுகளை வைத்திருந்தேன். அதில் இலவசமாகக் கிடைத்த டிக்கெட்தான் (complimentary ticket) எனக்கு வெற்றியைத் தேடி தந்தது. இரண்டு டிக்கெட்டுகள் வாங்கும்போது, நான்கு டிக்கெட்டுகள் இலவசமாகக் கிடைத்தன. 6 டிக்கெட்டுகள் இருந்ததால், டிராவில் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. நிச்சயம் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை இருந்தது. நிகழ்ச்சி தொகுப்பாளர் ரிச்சர்ட், வெற்றியாளர்களை மேடைக்கு அழைத்துக் கொண்டிருந்தார். அவரது குரலைப் பல ஆண்டுகளாகக் கேட்டிருக்கிறேன். அவர் வெற்றியாளர்களை மேடைக்கு அழைக்கும்போது, எனது பெயர் முதல் பரிசில் இருக்கும் என்பதை நான் எதிர்பார்க்கவில்லை. எனக்கு மட்டுமல்ல என்னுடன் குழுவிலிருந்த அனைவருக்கும் இது ஒரு மறக்க முடியாத தருணமாக அமைந்தது” என நெகிழ்ச்சியுடன் கூறுகிறார் ராஜீவ்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.