"பாண்டிராஜ் இல்லனா `கோலி சோடா' நடந்திருக்காது!" – நினைவுகள் பகிரும் இயக்குநர் விஜய் மில்டன்

`கோலி சோடா’ திரைப்படம் வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கின்றன. தமிழ் சினிமா பெரிதும் காட்சிப்படுத்தாத சென்னை கோயம்பேடு மார்க்கெட்டை தமிழ்நாட்டு மக்களுக்கு அறிமுகப்படுத்திய மிக முக்கியமான படம். இதில் இயக்குநர் விஜய் மில்டன் பேசிய விஷயங்களிலும் காட்டிய வாழ்வியலிலும் அவ்வளவு அழுத்தம், அத்தனை யதார்த்தம். இந்தப் படம் குறித்த நினைவுகளை அசைபோட்டபடியே, கோயம்பேடு மார்க்கெட்டை வலம் வந்தார்கள் ‘கோலி சோடா’ குழுவினர்கள். 

‘கோலி சோடா’ படத்தின் கதையை கோயம்பேடு மார்க்கெட்டை வைத்துதான் எழுதுனீங்களா?

“நான் இந்தக் கதையை எழுதும் போது இது ஒரு மார்க்கெட்டில் நடக்குற கதையாகத்தான் எழுதுனேன். ஆனால், கோயம்பேடு மார்க்கெட்டை மனசுல வெச்சு எழுதலை. வேற ஒரு படத்துக்காக லொகேஷன் பார்க்க கோயம்பேடு மார்க்கெட் வந்தப்போது, டாப் ஆங்கிள் பார்க்கிறதுக்காக மாடிக்குப் போனேன். அங்க வரிசையா பல பேரு தூங்கிட்டு இருந்தாங்க. ‘இவங்க யாரு’னு கேட்டப்போ, ‘எல்லாரும் மூட்டை தூக்குறவங்க. நைட் முழுக்க மூட்டை தூக்கிட்டு பகலில் தூங்குவாங்க’னு சொன்னாங்க. இவங்களுக்கும் மார்க்கெட்டிற்கு காய் வாங்க வரவங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. ஆனால், அவங்களுக்காகத்தான் இவங்க உழைக்கிறாங்க. இவங்க ரெண்டு பேருக்கும் கனெக்‌ஷனைக் கொடுத்தால் எப்படி இருக்கணும்னு யோசிச்சு, நான் எழுதுன கதையை கோயம்பேட்டிற்கு மாற்றினேன். அப்படி மாத்துனத்துக்கு அப்பறம் கோயம்பேடுல இருக்கிறவங்களோட வாழ்க்கையை பற்றி ரிசர்ச் பண்ணி மார்க்கெட்ல அவங்களுக்கு சாப்பிட நல்ல சாப்பாடு கிடைக்குதா? பந்த் அப்போ அவங்க வாழ்க்கை எப்படி இருக்கும்? மார்க்கெட்டில் இருக்கிற காய்கறி, பழ கழிவுகளால அவங்களுக்கு எந்த மாதிரியான நோய்கள் வருதுனு சில விஷயங்களை கதைக்குள்ள சேர்த்தேன்.”

நடிகர்களை எப்படித் தேர்வு பண்ணீங்க..?

கோலி சோடா பசங்க…

“ஆரம்பத்தில் இருந்தே இந்தக் கதையில் வர பசங்களோட வயசு 13, 14 தான்னு முடிவு பண்ணிட்டேன். ‘பசங்க’ பட இயக்குநர் பாண்டிராஜ், எனக்கு பல வருட நண்பர். அவர்கிட்ட இந்த கதையை சொன்னப்போ அவர்தான், ”பசங்க’ படத்துல நடிச்ச பசங்க இந்தக் கதைக்கு சரியா இருப்பாங்க. அவங்களுக்கு இந்த வயசுதான்’ன்னு சொல்லி எல்லாரையும் வர வச்சார். பசங்க வந்ததும் அவங்களுக்கு காஸ்ட்டியூம் போட்டு லுக் டெஸ்ட் எடுத்தால், பக்காவாக இருந்தாங்க. இந்தப் படத்துல பசங்களோட பெரும்பாலான காஸ்ட்டியூம் கோயம்பேடு மார்க்கெட்ல வேலை பார்க்கிற பசங்க போட்டிருந்த டிரஸ்தான். அதுனாலதான் ஒரு ரியல் ஃபீல் கிடைச்சது. 

ஏடிஎம் சீதா

நாலு பசங்களும் கிடைச்சதுக்கு அப்பறம் மற்ற கேரக்டர்களுக்கான நடிகர்களைத் தேடிட்டு இருந்தேன். அதுல ஏடிஎம் கேரக்டரில் நடிக்கிறதுக்கு மட்டும் எனக்கு யாருமே செட்டாகலை. ரொம்ப லேட்டானதுனால ஷூட்டிங்கும் ஸ்டார்ட் பண்ணிட்டேன். ஏடிஎம் கேரக்டர் இல்லாத காட்சிகளை எல்லாம் ஷூட் பண்ணிட்டு இருந்தேன். நாளைக்குக் கண்டிப்பா ஏடிஎம் கேரக்டருக்கு சீன் எடுத்தே ஆகணும். ஆனால், இன்னைக்கு வரைக்கும் அந்த கேரக்டருக்கான ஆள் கிடைக்கலை. என் புல்லட்டை எடுத்துக்கிட்டு ஒவ்வொரு எக்ஸ்போர்ட் கம்பெனிக்கும் போனேன். அப்போ கே.கே நகர் கிட்ட ஒரு பொண்ணைப் பார்த்தேன். இந்தப் பொண்ணு இந்த கேரக்டருக்கு சரியா இருக்குமேனு யோசிச்சி அந்தப் பொண்ணுக்கிட்ட, ‘இதுதான் என் நம்பர். எனக்கு போன் பண்ணு’னு சொன்னதும் ‘தூ’னு துப்பிட்டு போயிட்டாள். பின்னாடி ஃபாலோ பண்ணி அவங்க வீட்டுக்குப் போயிட்டேன். அவங்க அம்மாகிட்ட எல்லா விவரத்தையும் சொன்னதுக்கு அப்பறம், ‘நாளைக்கு நான் கூப்பிட்டு வரேன் சார்’னு சொல்லிட்டாங்க. அடுத்த நாள் அந்தப் பொண்ணு வந்ததும் காஸ்ட்டியூம், கண்ணாடினு எல்லாம் போட்டு பார்த்ததும், நான் நினைச்ச கேரக்டராகவே இருந்தாள்.

ஆச்சி சுஜாதா

இந்தப் படத்தோட கதையை எழுதி முடிச்சதும் இதுல இருக்கிற முக்கியமான கேரக்டர்கள் எப்படி இருக்கணும்னு ஒரு போட்டோ புக் பண்ணினேன். அதுல பசங்க கேரக்டருக்கு மார்க்கெட்ல இருக்கிற பசங்களை போட்டோ எடுத்துதான் ஒரு ரெஃபரன்ஸுக்கு வச்சிருந்தேன். ஆனால், ஆச்சி கேரக்டருக்கு மட்டும் நான் ‘பருத்தி வீரன்’ சுஜாதா போட்டோவை தான் ஒட்டியிருந்தேன். அந்தளவுக்கு இந்த கேரக்டருக்கு அவங்க தான்னு முடிவு பண்ணியிருந்தேன். அவங்க ‘பசங்க’ படத்திலேயும் நடிச்சிருப்பாங்க. அதுனால பாண்டிராஜை வச்சுத்தான் அவங்களை மீட் பண்ணி கதை சொன்னேன். அவங்களுக்கு கதை ரொம்ப பிடிச்சுப் போச்சு. அவங்களோட முதல் நாள் ஷூட்டிங்கிற்காக மார்க்கெட்டுக்கு வந்தாங்க. ரொம்ப நேரம் ஆகியும் ரெடியாகி ஸ்பாட்டுக்கு வராம இருந்தாங்க. என்னனு போய் பார்த்தால், அழுதுட்டு இருக்காங்க. மார்க்கெட்டோட ஸ்மெல் அவங்களுக்குப் பிடிக்கலை. அதுனால இங்க நடிக்க முடியாதுனு சொன்னாங்க. அப்பறம் நான் வச்சிருந்த அந்த போட்டோ புக்கை காட்டி, ‘இந்தக் கேரக்டருக்கு நீங்க நடிச்சாதான் நல்லா இருக்கும். டைம் எடுத்துக்கோங்க. நாளைக்கு கூட ஷூட் பண்ணலாம்’னு சொல்லிட்டு வந்தேன். அப்பறம் அவங்களோட கணவர் அவங்களை சமாதானம் பண்ணி கொஞ்ச நேரத்திலேயே ஸ்பாட்டுக்குக் கூப்பிட்டு வந்திட்டார். அவங்களும் அதுக்கப்பறம் சூப்பரா நடிச்சுக் கொடுத்தாங்க.”

இயக்குநர் பாண்டிராஜை எப்படி வசனம் எழுத வச்சீங்க?

இயக்குநர் பாண்டிராஜ்

“இந்த கேள்விக்கு பாண்டிராஜ் பதில் சொன்னா சரியாக இருக்கும்னு நினைக்கிறேன். நான் பாண்டிராஜுக்கு இந்தக் கதையை சொல்லும் போதே, முழு ஸ்கிரிப்ட்டும் முடிச்சிட்டேன். படிச்சிட்டு சில முக்கியமான கரெக்‌ஷன்ஸ் சொன்னான். அப்போ, ‘வசனம்னு உன் பெயர் போட்டுக்கிறேன்’னு சொன்னேன். முதலில் வேண்டாம்னுதான் சொன்னான். நான்தான், ‘இந்தப் படத்தை எப்படி விக்கிறதுனு தெரியலை. பெரிய ஹீரோக்கள் நடிக்கலை, பெரிய தயாரிப்பு நிறுவனமும் இல்லை. உன்னை மாதிரி ஒரு வெற்றி பெற்ற இயக்குநரோட பெயர் படத்துல இருக்கும் போது அது ரொம்ப உதவியா இருக்கும்’னு சொன்னேன். அப்பறம் ஓகே சொல்லிட்டான்.

படத்தோட இசை வெளியீட்டு விழாவில், ‘நான் வசனம் எழுதலைனு சொல்லிடப்போறேன்’னு சொன்னான். நான்தான் அவனை கன்ட்ரோல் பண்ணி வச்சேன். நிச்சயமாக பாண்டிராஜ் இல்லனா ‘கோலி சோடா’ நடந்திருக்காது. ஏன்னா, இந்தக் கதையை கேட்டுட்டு ‘பசங்க’ படத்துல நடிச்ச பசங்க சரியாக இருப்பாங்கனு இந்தப் படத்துக்குள்ள அவங்களை கொண்டு வந்ததுல ஆரம்பிச்சி எனக்கு ஷூட் பண்றதுக்கு பணம் இல்லாத சமயங்களில் எனக்கு பண உதவி செஞ்சது வரைக்கும் பல உதவிகள் பண்ணியிருக்கான்.”

‘கோலி சோடா’ வெற்றிக்கு அதோட திரைக்கதை ரொம்ப பெரிய ப்ளஸ். அதோட ரைட்டிங் அனுபவத்தைப் பற்றிச் சொல்லுங்க…

“நான் எழுதியிருந்த திரைக்கதையே வேற. படம் ஆரம்பிக்கும் போது நாலு பசங்களும் வேற, வேற ஊர்ல அடிபட்டு கிடக்கிற மாதிரி காட்டிட்டு, ‘இவங்க யாரு? இவங்களுக்கு என்ன ஆச்சு?’னு ஃப்ளாஷ்பேக் மாதிரி ஓப்பன் பண்ணலாம்னு எழுதியிருந்தேன். ஆனால், எடிட்டர் ஆண்டனிதான் இதோட பேட்டனை மாற்றினார். இந்தக் கதையை கோயம்பேடுல இருந்தே கொண்டு போகலாம்னு அவர்தான் எடிட் பண்ணி காட்டினார். அந்த வெர்ஷன் பார்க்கும் போது படம் ஆரம்பிச்சு 50 நிமிஷம் கழிச்சுதான் சண்டை ஆரம்பிக்கும். ‘ஆடியன்ஸுக்கு போர் அடிச்சிடுமா’னு ஆண்டனி கிட்ட கேட்டேன். நிச்சயமா இந்த பேட்டன் வொர்க் அவுட் ஆகும்னு சொன்னார். அதே மாதிரி அது வொர்க் அவுட் ஆச்சு.”

டீன் ஏஜ் பசங்களை ரொம்ப சரியா காட்டுன படமாகவும் ‘கோலி சோடா’ இருந்துச்சு. ஆரம்பத்தில் இருந்தே அதில் கவனமாக இருந்தீங்களா?

“நான் அதையெல்லாம் மனசுல வச்சிக்கிட்டு ஸ்கிரிப்ட் எழுதவேயில்லை. படம் ரிலீஸான முதல் நாள் சிவக்குமார் சார் போன் பண்ணி, ‘இதுவரைக்கும் 13 – 14 வயசு பசங்களை வச்சு படம் பண்ண இயக்குநர் பண்ணுன எந்த விஷயத்தையுமே நீ பண்ணலை. படம் ரொம்ப நல்லா இருக்கு’னு சொன்னார். அப்போதுதான், ‘ஆமால. பசங்க தம் அடிக்கிற மாதிரியோ, தண்ணி அடிக்கிற மாதிரியோ, பொண்ணுங்க பின்னாடி தப்பான கண்ணோட்டத்தில சுத்துற மாதிரியோ சீன்ஸ் இல்லாமல் இந்தப் படத்தை எடுத்திருக்கோம்’னு தோணுச்சு. இது நானே ப்ளான் பண்ணாமல் அதுவே நடந்தது.”

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.