ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய ‘லால் சலாம்’ படத்தில் ரஜினிகாந்த் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார். இப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது.
இப்படத்தைத் தொடர்ந்து தனது 170-வது படமான ‘வேட்டையன்’ படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. லைகா தயாரிக்கும் இப்படத்தை ‘ஜெய் பீம்’ பட இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கி வருகிறார். இது தவிரத் தனது 171-வது படத்திற்காக லோகேஷ் கனகராஜுடன் கை கோர்த்திருக்கிறார் ரஜினி. சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது. இந்நிலையில் ‘வேட்டையன்’ படப்பிடிப்பிற்காக ஹைதராபாத் சென்றிருக்கும் ரஜினி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்.

அப்போது ‘லால் சலாம்’ படம் குறித்த கேள்விக்கு, “’லால் சலாம்’ படம் ரசிகர்களுக்கும் மக்களுக்கும் ரொம்ப பிடித்திருக்கிறது என்று கேள்விப்பட்டேன். படம் மிகப்பெரிய வெற்றி அடைந்திருக்கிறது. லைகா ப்ரொடக்ஷன்ஸ், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உள்ளிட்ட அனைத்து படக்குழுவினருக்கும் வாழ்த்துகள்” என்றார்.
“விஜய், விஷால் போன்ற நடிகர்கள் அரசியலுக்கு வருவதாகச் சொல்லி வருகிறார்கள். முதல்வர் பதவி அவ்வளவு எளிதானதாகத் தெரிகிறதா?” என்று கேட்டதற்குப் பதிலளித்த அவர், “நோ பாலிடிக்ஸ்… அரசியல் குறித்த கேள்வி கேட்க வேண்டாம்” எனக் கூறி தவிர்த்துவிட்டார்.

பின்பு ‘வேட்டையன்’ பட பணிகள் குறித்த கேள்விக்கு, “80 சதவிகித படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இன்னும் 20 சதவிகிதம் இருக்கிறது. இந்தப் படம் முடிந்த பிறகு லோகேஷ் கனகராஜ் படம் தொடங்கும்” என்று தெரிவித்திருக்கிறார்.