சண்டிகர்: நாடு முழுவதும் உள்ள 200-க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் வரும் பிப்.13ஆம் தேதி மத்திய அரசுக்கு எதிராக பேரணி அறிவித்திருந்த நிலையில், ஹரியாணா மாநிலத்தின் எல்லைப் பகுதிகள் மூடப்பட்டுள்ளன. மேலும் பல்வேறு மாவட்டங்களில் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.
பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்யும் புதிய சட்டத்தை இயற்றுவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சம்யுக்தா கிசான் மோர்ச்சா, கிசான் மஸ்தூர் மோர்ச்சா உள்ளிட்ட 200-க்கும் அதிகமான விவசாய சங்கங்கள் வரும் பிப்.13 அன்று ‘டெல்லி சலோ’ என்ற பெயரில் மத்திய அரசுக்கு எதிராக டெல்லியில் பேரணி நடத்தப் போவதாக அறிவித்துள்ளன. இதற்காக நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் பலரும் டெல்லியை நோக்கி புறப்பட்டு வருகின்றனர்.
இதன் எதிரொலியாக, ஹரியாணா – பஞ்சாப் எல்லையில் அமைந்திருக்கும் அம்பாலா, அம்பாலா, குருஷேத்ரா, கைதல், ஜிந்த், ஹிசார், ஃபதேஹாபாத் மற்றும் சிர்சா ஆகிய மாவட்டங்களில் வரும் பிப்.13 வரை இணையம் மற்றும் எஸ்எம்எஸ் சேவைகள் துண்டிக்கப்படுவதாக ஹரியாணா அரசு தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கை நாளை (பிப்.11) அதிகாலை 6 மணி முதல் பிப்.13ஆம் தேதி இரவு 11.59 மணி வரை அமலில் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் எல்லைப் பகுதிகள் ஏராளமான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பேரணிக்கு செல்பவர்களை தடுக்கும் வகையில் தடுப்பு வேலிகள், மணல் மூட்டைகளை ஆகியவற்றையும் அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் அமைத்துள்ளன. பேரணியின் போது பொதுச் சொத்துகளுக்கு பாதிப்பு ஏற்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர். மேலும் பொதுமக்கள் அவசர தேவைகள் இன்றி பஞ்சாப் மாநிலத்துக்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்றும் போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.