Lal Salaam: "எல்லாரும் என்னை காமெடியனா பார்த்தப்ப ஐஸ்வர்யா மேடம் மட்டும்…" – தங்கதுரை நெகிழ்ச்சி

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் திரைப்படம் `லால் சலாம்’. இந்தப் படத்தில் காமெடி நடிகராக நமக்கு பரிச்சயமான தங்கதுரை நடித்திருக்கிறார். அவருக்கே உரித்தான பழைய ஜோக் எதையும் இந்தப் படத்தில் பயன்படுத்தாமல் அவருக்குக் கொடுக்கப்பட்ட கேரக்டராகவே பயணித்திருக்கிறார். அவரிடம் பேசியதிலிருந்து…

தங்கதுரை

“படத்துடைய கேமராமேன் விஷ்ணு ரங்கசாமி சார் மூலமாகத்தான் நான் இந்தப் படத்திற்குள் வந்தேன். ஒரு படம் பண்ணிட்டு இருக்கோம் நீங்க வாங்கன்னு கூப்பிட்டார். எங்க வரணும்னு கேட்டப்ப போயஸ் கார்டன் வந்துடுங்கன்னு சொன்னார். போயஸ் கார்டன்னா ரஜினி சார் இருக்கிற இடமாச்சேன்னு கேட்கவும் ஐஸ்வர்யா மேம்தான் பண்றாங்க… ரஜினி சாரும் நடிக்கிறாங்கன்னு சொன்னதும் ‘சார் வந்துடுறேன்’னு சொல்லிட்டு கிளம்பிப் போனேன்.

மேடம் என்னைப் பார்த்ததும் கிரிக்கெட் விளையாடத் தெரியுமான்னு கேட்டாங்க. ஒரு ரோல் இருக்கு கேரக்டர் ரோல்னு சொல்லி என் கேரக்டர் பற்றிச் சொன்னாங்க. இதுவரைக்கும் எல்லாரும் நம்மள காமெடியனா பார்த்தப்ப மேடம்தான் கேரக்டர் ரோலும் பண்ணுவேன்னு படத்துல அப்படியொரு ரோல் கொடுத்திருக்காங்க. அதுக்காகவே ஐஸ்வர்யா மேமுக்கு நன்றி சொல்லியே ஆகணும். இதுக்கப்புறம் ஒரு மாற்றம் என் கரியரில் நிகழும்.

தங்கதுரை

நம்ம ஊருல கிரிக்கெட் விளையாடுற மாதிரிதான். விஷ்ணு விஷால் சாருடன் டிராவல் பண்ற மாதிரி ரோல். நம்ம தெருல ஒரு பையனைப் பார்த்த மாதிரி இருக்கும். ரப்பர் பந்துல விளையாடி ஏமாத்திடலாம்னு நினைச்சுதான் போனேன். ஆனா, அங்க போன பிறகுதான் தெரிஞ்சது அது புரொபஷனல் கிரிக்கெட். உண்மையாகவே கிரிக்கெட் விளையாடுற பந்து வச்சுதான் நாங்க விளையாடினோம். விஷ்ணு சார், விக்ராந்த் சாருக்கெல்லாம் அடிபட்டும் அவங்க விளையாடினாங்க. அவங்க ரெண்டு பேரும் இந்திய கிரிக்கெட் அணிக்காகவே விளையாடலாம். அவ்ளோ திறமை ரெண்டு பேருக்கும் இருக்கு! என்னை ரெண்டு பேருமே வச்சு செஞ்சாங்க. இப்ப கிரிக்கெட் பற்றி நிறையவே கத்துக்கிட்டேன்.

ரஜினி சாரைப் பார்க்கணும்னு ரொம்ப ஆசை. எப்ப வருவாருன்னு வெயிட் பண்ணிட்டே இருந்தேன். மும்பையில் ஷூட் போச்சு… அப்பதான் அவரை நேர்ல பார்த்தேன். வயசு வெறும் நம்பர் தாங்கன்னு அப்போதான் எனக்குப் புரிஞ்சது. கூலிங் கிளாஸ் போட்டு நடந்து வர்றாரு… அவ்ளோ மாஸா இருந்தாருங்க. சார்கிட்ட பேசணும், போட்டோ எடுக்கணும்னு பார்த்துட்டே இருந்தேன். மும்பையில் சாருடன் ஃபோட்டோ எடுக்க முடியல. அதுதான் வருத்தமா இருந்துச்சு. ரஜினி சாருடன் காம்பினேஷன் சீன் பண்ணியிருக்கேன்.

தங்கதுரை

இந்தப் படம் என் லைஃப்ல மறக்க முடியாத திரைப்படம். நிச்சயம் இது என் வாழ்க்கையின் அடுத்தக்கட்டமாக இருக்கும்னு நம்புறேன்!” என்றார்.

லால் சலாம் படம் தொடர்பாக தங்கதுரை நமக்கு அளித்திருந்த பேட்டியைக் காண லிங்கை கிளிக் செய்யவும்! 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.