தெலங்கானா மாநிலம், சூர்யா பேட்டையில், இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவி நேற்று இரவு நண்பர்களுடன் ஃபெர்வேல் டே பார்ட்டிக்குச் சென்றிருக்கிறார். பெண்கள் கல்லூரியில், இரவு 9:30 மணியளவில், விருந்து நடந்து கொண்டிருக்கும போதே, மாணவி மட்டும் கல்லூரி விடுதிக்குச் சென்றிருக்கிறார். மேலும், விருந்து பற்றி தன் குடும்பத்தாருக்கு வீடியோ காலில் பேசியிருக்கிறார். ஆனால், அடுத்த சில மணி நேரத்தில், விடுதி ஊழியர்கள், மாணவியின் பெற்றோருக்கு, ‘மாணவிக்கு தீடீரென உடல்நிலை மோசமாகிவிட்டது. அவரை மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறோம். உடனே புறப்பட்டு வாருங்கள்’ என போனில் தகவல் அளித்திருக்கிறார்கள்.

ஆனால், பெற்றோர் செல்வதற்குள், தகவலளித்த ஊழியர் அங்கிருந்து சென்றுவிட்டார் எனக் கூறப்படுகிறது.
இந்த விவகாரம் குறித்துப் பேசிய காவல்துறை அதிகாரி, “மாணவி விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாகத் தகவல் கிடைத்தது. உடனே அவரின் உடலை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டுசென்றோம். அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தார்கள். மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் விசாரணையை தொடங்கியிருக்கிறோம்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.