கோலி வைரம்…. பும்ரா அப்போதே இதை சொன்னார் – ரவி சாஸ்திரி பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்

இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் இந்திய அணியில் விராட் கோலி இடம்பெறவில்லை. தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் விலகியுள்ளார். ஜஸ்பிரித் பும்ரா பவுலிங்கில் சூப்பர் பார்மில் இருக்கிறார். விசாகப்பட்டினத்தில் கடைசியாக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். இருவர் குறித்தும் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி சுவாரஸ்யமாக தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார். விராட் கோலியை வெட்டப்படாத வைரம் என புகழ்ந்திருக்கும் ரவி சாஸ்திரி, மற்றவர்கள் யாரும் வெள்ளை பந்து நிபுணர் என அழைப்பதை பும்ரா விரும்பவில்லை, அதனை நான் கண்கூடாக பார்த்தேன் என தெரிவித்துள்ளார். 

ரவிசாஸ்திரி, தி டைம்ஸ்’ பத்திரிகைக்கு எழுதும் இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் அதர்டனுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் பும்ராவுடன் கொல்கத்தாவில் நடைபெற்ற உரையாடலை பகிர்ந்துள்ளார். “நானும் பும்ராவும் கொல்கத்தாவில் தான் முதன்முறையாக பேசிக் கொண்டோம். அப்போது அவரை எல்லோரும் வெள்ளை பந்து ஸ்பெஷலிஸ்ட் என அழைக்க ஆரம்பித்திருந்தார்கள். ஆனால் பும்ராவுடன் பேசும்போது அதில் அவருக்கு உடன்பாடில்லை என்பதை தெரிந்து கொண்டேன். ஏனென்றால் பும்ராவை கேட்காமலேயே எல்லோரும் இந்த பட்டத்தை அவருக்கு கொடுத்துவிட்டார்கள்.

ஆனால், நான் கொல்கத்தாவில் முதன்முறையாக சந்தித்து பேசும்போது டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்கு ஆர்வமா? என கேட்டேன். பும்ரா யோசிக்காமல் அந்த நாள் தான் என் கிரிக்கெட் வாழ்க்கையில் மிகப்பெரிய நாளாக இருக்கும் என கூறினார். அப்போது தென்னாபிரிக்கா டெஸ்ட் தொடரில் வாய்ப்பு இருக்கும் தயாராக இரு என தெரிவித்தேன். அதன்படியே 2018 ஆம் ஆண்டு டர்பனில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் பும்ரா டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார். 

அவருக்கு டெஸ்ட் கிரிக்கெட் மீது எவ்வளவு ஆர்வம் இருக்கிறது என்பதை அறிய வேண்டும் என நான் விரும்பினேன். அதற்காகவே வாய்ப்பு கொடுத்தேன். விராட் கோலி எப்படி என்று என்னிடம் கேட்டால், அவர் ஒரு வெட்டப்படாத வைரம். அவருடன் டெஸ்ட் கிரிக்கெட் விளையாட விரும்பினேன். 2014 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியின் இயக்குநராக பொறுப்பேற்று பின்னர் பயிற்சியாளராக பணியாற்றினேன். அப்போது, நான் கூறியது என்னவென்றால் எல்லோரும் தனித்திறமை மீது கவனம் செலுத்தாமல் அணியின் திறமையில் கவனம் செலுத்துமாறு கூறினேன். 

நான் தொடக்கத்தில் இருந்தே விராட் கோலியிடம் கேப்டன்சி திறமையை பார்த்தேன். அதேபோல், டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் வென்று கொண்டே இருக்க வேண்டும் என விரும்பினேன்” என தெரிவித்தார். விராட் கோலி – ரவிசாஸ்திரி கூட்டணியின் கீழ் இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் சிறப்பான வெற்றியை பதிவு செய்தது. அத்துடன் இந்திய அணியை ஐசிசி தரவரிசையில் புதிய உயரத்துக்கும் எடுத்துச் சென்றது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.