சிவகங்கை: சிவகங்கை தொகுதியை குறி வைத்து அர்ஜுனமூர்த்தி காய் நகர்த்தி வருகிறார். காங்கிரஸில் கார்த்தி சிதம்பரம் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அதிமுக தரப்பும் சுறுசுறுப்பு காட்டி வருகிறது. அதேசமயத்தில் பாஜக கூட்டணியில் அமமுகவுக்கு சிவகங்கை தொகுதி ஒதுக்கப்படலாம் என்று கூறப்பட்டு வரும் நிலையில் அதை அக்கட்சியினர் மறுத்து வருகின்றனர்.
சிவகங்கை, கன்னியாகுமரி, கோவை, திருப்பூர், தென்சென்னை, ராமநாதபுரம் உள்ளிட்ட 9 தொகுதிகளில் பாஜக வலுவாக உள்ளதால், அத்தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு கட்சித் தலைமை விட்டு கொடுக்காது என்று பாஜகவினர் கூறி வருகின்றனர். இந்நிலையில் சிவகங்கை மக்களவை தொகுதி பொறுப்பாளராக ரா.அர்ஜுனமூர்த்தி நியமிக்கப்பட்டார். இந்நிலையில் அதே தொகுதியில் தனக்கு சீட் பெற காய் நகர்த்தி வருகிறார். இதற்காகவே அவர் தொகுதி பொறுப்பாளர் பதவியை கேட்டு பெற்றதாக கூறப்படுகிறது. புதுக்கோட்டையைச் சேர்ந்த அவர், பாஜகவில் அறிவுசார் பிரிவு தலைவராக இருந்தார். வேல் யாத்திரை, கொடி ஒழிப்புத் திட்டம் மூலம் சோலார் கொடி கம்பம், ஏழைகளை மேம்படுத்த வாழ்வாதார அடை காப்பகம் திட்டம் போன்றவற்றை செயல்படுத்தியதில் முக்கிய பங்கு வகித்தார்.
இதனால் கட்சி தலைமையோடு நெருக்கமாக இருந்த அவர், திடீரென நடிகர் ரஜினி கட்சி தொடங்க முடிவு செய்தபோது அங்கு சென்றார். ஆனால், ரஜினி கட்சி தொடங்கும் முடிவை கைவிட்டதால் தனியாக இந்திய மக்கள் முன்னேற்றக் கட்சியை அர்ஜுனமூர்த்தி தொடங்கினார். பின்னர் அதையும் கலைத்துவிட்டு, மீண்டும் பாஜகவில் இணைந்தார். இதையடுத்து அவருக்கு சமூக ஊடகப் பிரிவு மாநில பார்வையாளர் பதவி வழங்கப்பட்டது.
தற்போது சிவகங்கை மக்களவைத் தொகுதி பொறுப்பாளராக இருக்கும் அவர், அத்தொகுதியில் போட்டியிட மறைமுகமாக சர்வே எடுத்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் ரஜினி ரசிகர்கள் வாக்கு தனக்கு கிடைக்கும் என கணக்குபோடும் அவர், அதற்கான வேலைகளிலும் இறங்கியுள்ளார். ஏற்கெனவே சிவகங்கை தொகுதியில் போட்டியிட மூத்த தலைவர் ஹெச்.ராஜா, மாவட்டத் தலைவர் மேப்பல்சக்தி, மதுரை மக்களவைத் தொகுதி பொறுப்பாளர் பி.எம்.ராஜேந்திரன் உள்ளிட்டோர் விரும்புகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து அர்ஜுனமூர்த்தி கூறியதாவது: மோடியின் 10 ஆண்டுகால ஆட்சி, அண்ணாமலை மீது இளைஞர்களுக்கு இருக்கும் ஈர்ப்பு போன்றவை மூலம் இந்த முறை தமிழகத்தில் 25 இடங்களை பாஜக கூட்டணி பெறும். சிவகங்கையிலும் பாஜகவே வெற்றி பெறும். சிவகங்கை தொகுதியில் 1873 பூத்களிலும் 13 பேர் கொண்ட குழு அமைத்துள்ளோம். அதில் உள்ள ஒவ்வொருவரும் குறைந்தது 30 வாக்குகளை கவர்ந்து வருகின்றனர். இதனால் பாஜகவுக்கு 7.30 லட்சம் வாக்குகள் கிடைக்கும். மேலும் அதிமுக பாஜகவிடம் இருந்து பிரிந்ததால், எந்த பாதிப்பும் இருப்பதாக தெரியவில்லை. சிவகங்கை ஆன்மிக பூமி. எனக்கு கட்சி சிவகங்கை தொகுதியில் நிற்க சீட் கொடுத்தால் நிற்பேன்.