சின்ன வயது சினிமா சாதித்தேன் – தேஜா வெங்கடேஷ்

'குழந்தைகளின் கனவு, லட்சியத்தை பெற்றோர் மதிக்க வேண்டும். உங்களை யார் நம்பினாலும் நம்பவில்லை என்றாலும் நீங்கள் உங்களை நம்பினால் வெற்றியை தன்வசப்படுத்தலாம்,' என்கிறார் நடிகை தேஜா வெங்கடேஷ். ஓட்டல் மேனஜ்மென்ட் படித்த பெங்களூருவை சேர்ந்த இவர் வெப்சீரிஸ், தொலைக்காட்சி தொடர், குறும்பட, திரைப்பட நடிகை என வளர்ந்து வருபவர்.

இவர் கூறியதாவது: பிறந்து வளர்ந்து படித்தது பெங்களூரு. எனக்கு பள்ளி பருவத்திலிருந்தே படிப்பில் பிடித்தம் இல்லை. படிப்பை தவிர்த்து நடனம், நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது, வாலிபால் விளையாட்டுகள் என்று ஆர்வத்தை செலுத்தினேன். வாலிபாலில் தேசிய அளவில் விளையாடியிருக்கிறேன்.

சின்ன வயதிலிருந்தே சினிமாவில் சாதிக்க ஆசை. ஆனால் அப்பாவிற்கு பிடிக்கவில்லை. நான் பள்ளிப்பருவத்தில் இருந்ததால் என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. 2016 காலக்கட்டங்களில் டிக்டாக், டப்ஸ்மாஸ் போன்றவைகளில் திறமையை காட்ட ஆரம்பித்தேன். அதில் வரவேற்பு கிடைத்தது. என் நிறம் கருப்பாக இருந்த காரணத்தினால் பல இடங்களில் புறக்கணிக்கபட்டிருக்கிறேன். அதை நான் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை.

மெல்ல மெல்ல கல்லுாரி செல்லும் அளவிற்கு வளர ஆரம்பித்தேன். என்னோடு சேர்த்து என் ஆசைகளும் வளர்ந்தது. 2017ல் கல்லுாரி படிக்கும் போது அருவி திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளை என் சொந்த குரலில் பதிவு செய்து எடிட் செய்து சமூக வலைதளத்தில் பதிவு செய்தேன். அதற்கு வரவேற்பு கிடைத்தது.

அது வைரலானதை தொடர்ந்து அப்படத்தின் இயக்குநர் அருண்பிரபு என்னை தொடர்பு கொண்டு வாழ்த்தினார். என் சினிமா பயணத்தில் அது எனக்கு கிடைத்த முதல் வெற்றியாக நினைத்தேன். தொடர்ந்து நடிக்க நான் அப்பாவிடம் சம்மதம் கேட்டேன்; ஆனால் அவர் தரவே இல்லை. அப்பாவிற்கு தெரியாமல் கடல்கன்னி குறும்படத்தில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்தேன். ஓரளவு வரவேற்பு கிடைத்தது. அப்பாவிடம் மீண்டும் சம்மதம் கேட்டேன்; இந்த முறை அவர் அனுமதியளித்தார்.

அதன்பின் 30 குறும்படங்கள்,10 ஆல்பம் பாடல்களில் நடித்தேன். ஆஹா கல்யாணம் வெப்சீரிசில் மித்ரா கேரக்டரில் நடித்தது எனக்கு மக்களிடம் வரவேற்பை பெற்றது. 2020ல் விஷால் நடித்த எனிமி படத்தில் ஹீரோயினுக்கு தோழியாக நடித்தேன். கொரோனா ஊரடங்கு வந்தது. அப்படியே வீட்டிலிருந்த எனக்கு கனா காணும் காலங்கள் வெப்சீரிசில் நடிக்கும் வாயப்பு. நந்தினி கேரக்டரில் மக்கள் மனதில் பதிய தொடங்கினேன். தற்போது ஜீவா இயக்கும் ஒரு படத்தில் 2 வது கதாநாயகியாக நடிக்கிறேன். இந்த படம் விரைவில் வெளியாகும். பெஸ்ட் வெப்சீரிஸ் விருது பெற்றுள்ளேன் என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.