புதுச்சேரி தி.மு.க சார்பில் உரிமைகளை மீட்க ஸ்டாலின் குரல் என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் கருவடிகுப்பத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, “தி.மு.க-வை அழிக்க யாரெல்லாமோ நினைத்தார்கள். எத்தனையோ பிரதமர்கள் நினைத்தார்கள். நான் வரலாற்றை கூறுகிறேன். ஒருமுறை ஜவஹர்லால் நேரு, தி.மு.க-வால் வெற்றி பெறவும் முடியாது. ஆட்சிக்கு வரவும் முடியாது என்று சொன்னார்.

ஆனால் அவர் மகள் இந்திராவை அழைத்து பிரதமராக்கிய பெருமை தி.மு.க-வையே சேரும். நம் ஊரில் நெய்யை சாப்பிட்டுவிட்டு, மக்கள் ஓட்டு போடாமலேயே மத்திய அமைச்சராகியிருக்கிறார் நிர்மலா சீதாரமன். புதுச்சேரிக்கு துணைநிலை ஆளுநராக வருபவர்களிடம், முதலில் எவ்வளவு பணம் இருந்தது என்று கேட்க வேண்டும். ஏனென்றால் எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கெல்லாம் கணக்கு கேட்கிறீர்கள்தானே? அதேபோல புதுச்சேரி மாநிலத்திற்கு வரும் ஆளுநர்களுக்கு முன்பு எவ்வளவு சொத்து இருந்தது. பதவி முடிந்து போகும்போது எவ்வளவு சொத்து உள்ளது என்பதை கேட்க வேண்டும். நான் சவால் விட்டு கூறுகின்றேன்.
இந்த மாநிலத்தின் பணம் எல்லாவற்றையும் ஆளுநர்கள் சுருட்டிக்கொண்டு செல்கின்றார்கள். அவர்கள்மீது வழக்குப் போடவும் முடியாது. கணக்கு கேட்கவும் முடியாது. அந்த திமிரில்தான் ஆளுநர்கள் ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். பா.ஜ.க-வின் பத்து ஆண்டுக்கால ஆட்சியில், 411 எம்.எல்.ஏ-க்களை விலை கொடுத்து வாங்கியவர் மோடி. எந்த பிரதமரும் இதுவரை அப்படி செய்ததில்லை. தமிழ்நாட்டில் ஒரு ஆளுநர் இருக்கிறார். பீச்சில் மிட்டாய் விற்பதற்குத்தான் அவர் லாயக்கு. சட்டப்பேரவையில் திருடனை பிடிக்க போலீஸார் துரத்தியது போல ஓடினார் அவர். ராஜ் பவனில் அமர்ந்து பணக்காரர்களையெல்லாம் அழைத்து, அமலாக்கத்துறையை காட்டி, மிரட்டிப் பணம் பறிக்கிறார்.
நான் பகிரங்கமாகச் சொல்கின்றேன். தமிழகத்தில் பேசினால்கூட வழக்கு பாயாது என்று சொல்லலாம். நான் நீங்கள் (பா.ஜ.க – புதுச்சேரி) ஆளும் மாநிலத்தில் சொல்கிறேன். பா.ஜ.க ஆளாத மாநிலத்தில் இருக்கும் ஆளுநர்கள், மிகப்பெரிய பணக்காரர்கள் மற்றும் கள்ள மார்க்கெட்டில் பணத்தை கொள்ளை அடித்து வைத்திருப்பவர்களின் பட்டியலை தயாரிக்கிறார்கள். அதன் பிறகு வருமான வரித்துறையிடமிருந்து நோட்டீஸை பெற்று, ராஜ் பவனில் உட்கார வைத்து வசூல் செய்கின்றார்கள் இந்த ஆளுநர்கள்” என்றார்.