சூர்யா கடும் உழைப்பைக் கொடுத்து நடித்துவரும் படம் `கங்குவா’. அந்தப் படம் நன்றாக வந்திருப்பதில் மிகவும் சந்தோஷத்தில் இருக்கிறார் அவர். அதே நேரத்தில் அடுத்த படம் ஆரம்பிப்பதில் சில பல குழப்பங்கள் நிலவுவதாகத் தெரிகிறது.
‘கங்குவா’விற்குப் பிறகு அடுத்து அவருக்கு சுதா கொங்கரா படமான ‘புறநானூறு’ படத்தைத்தான் ஆரம்பிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. சூர்யாவின் 43வது படமான இதில், அவரோடு மிகவும் முக்கியமான கேரக்டர்களில் துல்கர் சல்மான், நஸ்ரியா, விஜய் வர்மா இவர்களைத் தேர்ந்தெடுத்து நடிக்க வைப்பதாக அறிவிப்பு செய்திகளும் வெளியாகின.

ஜி.வி.பிரகாஷின் நூறாவது படமாகவும் ‘புறநானூறு’ அறியப்பட்டது. ரொம்பவும் சந்தோஷமாக ஜி.வியும் அதை எல்லா இடங்களிலும் பகிர்ந்து கொண்டார். இந்தப் படத்தை சூர்யாவே தன் 2D பேனரில் தயாரிக்க முன் வந்தார். 2023 அக்டோபரில் ஷூட்டிங் ஆரம்பிப்பதாகச் சொன்னார்கள், ஆனால் அது நடக்கவில்லை. பிறகு நிச்சயம் நவம்பரில் ஆரம்பமாகும் என்றார்கள், ஆனால் அப்போதும் தொடங்கவில்லை.
ஆரம்ப அறிவிப்புக்குச் சின்ன டீசருக்காக மட்டுமே படப்பிடிப்பு நடந்திருக்கிறது. இப்போது மற்றவர்களின் கால்ஷீட் எல்லாம் கிடைத்து, அதை ஒழுங்கு செய்து ஆரம்பிக்க இந்த வருட ஏப்ரல் மாதம் ஆகிவிடும் என முடிவு செய்திருக்கிறார்கள். இதற்கிடையில் ட்ரீம் வாரியர் கம்பெனிக்காக சூர்யா வருடத்துக்கு ஒரு படமாவது செய்து கொடுக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதியாம். வாய்மொழியாகக் கொடுத்த உறுதிதானாம்.
அதற்காக சுதா கொங்கரா படத்தை இன்னும் தள்ளி வைக்கலாமா என்ற யோசனையில் கூட இருக்கிறார்கள். அதனால், இடையில் ‘அயலான்’ இயக்குநர் ரவிக்குமார் குழு இப்போது ஏற்கனவே ஒப்புக்கொண்ட சூர்யா படத்தை இறுதி செய்து ஷுட்டிங்கிற்கு ரெடியாக உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால் ரவிக்குமார் படம் கூட முந்திக் கொள்ளலாம் என்கிறார்கள்.

இல்லாவிட்டால் ஒரே சமயம் அடுத்தடுத்து சுதா, ரவிக்குமார் படங்களை ஆரம்பிக்கிற முடிவும் பரிசீலனையில் இருக்கிறது. இதற்கிடையில் ‘வாடிவாசல்’ திறந்து விடும் என்றும் சொல்கிறார்கள். அமீர் நிச்சயமாக வில்லனாக நடிக்கிறார் என்றார்கள். இயக்குநர் அமீர் முதற்கொண்டு பலரும் ‘வாடிவாசல்’ பற்றிப் பேச ஆரம்பித்து விட்டனர். தயாரிப்பாளர், ஹீரோ சூர்யா மனம் திறப்பாரா என்று பார்ப்போம்.