ஷெரீப் இயக்கத்தில், வைபவ் நடிப்பில் இந்த வாரம் வெளியாகவுள்ள திரைப்படம் ‘ரணம் அறம் தவறேல்’.
இந்தப் படத்தில் நந்திதா ஸ்வேதா, தான்யா ஹோப், சரஸ் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மிதுன் மித்ரா புரொடக்சன்ஸ் சார்பில் மது நாகராஜன் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு அரோள் கரோலி இசையமைத்திருக்கிறார். இத்திரைப்படம் வருகின்ற 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. அதில், விஜய் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் ‘GOAT’ திரைப்படத்தில் நடிகர் வைபவ் நடிப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்குப் பதிலளித்த வைபவ், “GOAT படத்தில் விஜய்யுடன் நடித்துவருகிறேன். ஆனால் எனக்கு என்ன கதை என்றே தெரியாது. கதையே தெரியாமல்தான் அந்தப் படத்தில் நான் நடித்துவருகிறேன். இதனைத் தெரிந்துகொண்ட விஜய் என்னிடம், ‘இவ்வளவு நாள் ஷூட்டிங் வர, கதை தெரிலனா எப்படிடான்னு கேட்டாரு’. ‘சரோஜா’ படத்தில் நடித்ததிலிருந்தே வெங்கட் பிரபு எனக்கு எப்போதும் கதை சொல்லியது கிடையாது. உண்மையில் இந்தப் படத்தின் கதையும் எனக்குத் தெரியாது. ஆனால் படம் சிறப்பாகத் தயாராகி வருகிறது” என்று கூறியிருக்கிறார்.
வைபவ்வின் இந்தப் பேச்சு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.