மகாராஷ்டிரா மாநிலம், புல்தானா அருகில் உள்ள லோனார் தாலுகாவில் இருக்கும் சோம்தானே என்ற இடத்தில் இருக்கும் கபர்காதா கோயிலில் ஆன்மிக நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் 2,000-க்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர். ஆன்மிக நிகழ்ச்சிக்குப் பிறகு அதில் கலந்துகொண்டவர்களுக்குப் பிரசாதம் வழங்கப்பட்டது. பிரசாதத்தைச் சாப்பிட்ட சிறிது நேரத்தில் அவர்களுக்கு வாந்தி பேதி, மயக்கம் ஏற்பட்டது. ஆரம்பத்தில் சிலருக்கு மட்டுமே வாந்தி, பேதி ஏற்பட்டதால், அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஆனால் நேரம் ஆக ஆக, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே சென்றது.

இதையடுத்து அவர்கள் அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். அவர்கள் லோனார் மற்றும் சுல்தான்பூர், மெஹர் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். அப்படி இருந்தும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால், அவர்களுக்கு அரசு மருத்துவமனைகளுக்கு வெளியில் திறந்த வெளியில் சிகிச்சை கொடுக்கப்பட்டது. சோம்தானே மருத்துவமனையில் இடவசதி இல்லாமல், மருத்துவமனைக்கு வெளியில் திறந்த வெளியில் தார்பாய் கட்டி அதில் நோயாளிகளுக்கு சிகிச்சை கொடுக்கப்பட்டது.

இரண்டு மரங்களுக்கு இடையில் கயிறு கட்டி அதில் குளுக்கோஸ் பாட்டில்கள் மற்றும் சாலைன் நோயாளிகளுக்கு கொடுக்கப்பட்டது. யாரது உயிருக்கும் ஆபத்து இல்லை என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். நோயாளிகள் திறந்த வெளியில் சிகிச்சை பெறும் வீடியோம், சோசியல் மீடியாவில் வைரலாக பரவி இருக்கிறது. இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்த மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவிட்டிருக்கிறார். அதோடு உணவு மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. கெட்டுப்போன பிரசாதத்தைச் சாப்பிட்டதால்தான் பக்தர்கள் பாதிக்கப்பட்டதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது.