தனுஷின் 50வது படத்தின் டைட்டில் ‘ராயன்’ என அறிவிக்கப்பட்டுள்ளது. ‘ராயன்’ தான் படத்தின் தலைப்பு என்று நாம் முன்பே சொல்லியிருக்கிறோம். இதற்கிடையே `அந்தப் படத்தின் கதையை செல்வராகவன் எழுதியிருக்கிறார்’ எனத் தகவல் பரவியது. இதனை செல்வராகவன் மறுத்திருக்கிறார்.
`தனுஷின் 50வது படமான ‘ராயன்’ படத்தின் கதையை நான் எழுதியுள்ளதாகத் தகவல் பரவியுள்ளது. அதில் உண்மையில்லை. அந்தப் படம் தனுஷின் கனவுப் படைப்பு. அந்தப் படத்தில் நான் நடிகன் மட்டுமே!’ என்று தெரிவித்துள்ளார் செல்வா. இந்நிலையில் ‘ராயன்’ படத்தைப் பற்றி விசாரித்ததில் கிடைத்த தகவல்கள் இனி..
‘ராயன்’ படப்பிடிப்பை முடித்துவிட்டு, தனது அடுத்த படமான ‘டி51’ படத்தில் நடித்துவருகிறார் தனுஷ். முதற்கட்டப் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து முடிந்திருக்கிறது. அடுத்தகட்டப் படப்பிடிப்பு வரும் வாரத்தில் மீண்டும் அங்கே நடக்கிறது. ‘ராயன்’ படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சந்திப் கிஷன், அபர்ணா பாலமுரளி, காளிதாஸ் ஜெயராம், துஷாரா, செல்வராகவன் எனப் பலரும் நடித்துள்ளனர்.

வடசென்னையின் கேங்ஸ்டர் கதை இது. இப்படத்தின் கதையைப் பற்றி விசாரித்தால், வட சென்னையில் இரவு நேர உணவுக் கடையில் சமையல்காரராக வேலை செய்து வருகிறார் ராயன். ஒரு கட்டத்தில் அவரைப் பற்றிய உண்மை தெரிய வரும்போது, அனைவரும் அதிர்ச்சியடைகின்றனர். கேங்ஸ்டராக இருந்தவர்தான் இப்போது அமைதியின் வடிவமாக சமையல்காரராக இருந்துள்ளார் என்று தெரிகிறது.
அதன்பிறகு என்ன நடக்கிறது என்பது மீதிக்கதை என்கிறார்கள். ‘திருச்சிற்றம்பலம்’ ஓம்பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துவருகிறார். இந்தப் படத்தை முடித்துக்கொடுத்துவிட்டு அஜித்தின் ‘விடா முயற்சி’யில் வேலை செய்துவருகிறார். இந்தக் கதையில் அண்ணன் – தங்கைக்கான எமோஷனல் பேசப்படும் என்றும், ‘மாரி’ ரவுடி பேபி பாடலுக்குப் பின் பிரபுதேவாவுடன் இணைந்திருக்கிறார் என்றும் தகவல்.

படத்தில் தனுஷிற்கு ஜோடி இல்லையாம். இன்னொரு விஷயம், வடசென்னையை மையப்படுத்தும் கதை என்பதால் ஈ.சி.ஆரில் உள்ள ஒரு ஸ்டூடியோவில் 500க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் சூழ்ந்த பெரிய கிராமம் ஒன்றையே செட் போட்டுப் படப்பிடிப்பை நடத்தி முடித்திருக்கின்றனர். இப்போது போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் மும்முரமாக நடந்துவருகின்றன. தனுஷே இயக்கி நடிக்கிறார் என்பதால் டப்பிங் வேலைகளை இரவும் பகலுமாக கவனித்து வருகிறார் தனுஷ். படத்தின் இசை ஏ.ஆர்.ரஹ்மான். இதற்கு முன் தனுஷின் ‘அட்ராங்கி ரே’, ‘ராஞ்சனா’, ‘மரியான்’ படங்களுக்கு இசையமைத்தவர், இப்போது நான்காவது முறையாக தனுஷுடன் கைகோத்திருக்கிறார். இன்னும் சில நாள்கள் டப்பிங் பணிகள் நடக்கின்றன. அதனை முடித்துவிட்டு மீண்டும் சேகர் கம்முலாவின் படப்பிடிப்பில் பங்கேற்கிறார் தனுஷ்.