‘சீதா’, ‘அக்பர்’ சர்ச்சை – சிங்கங்கள் பெயரை மாற்ற கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவு

கொல்கத்தா: சிலிகுரி உயிரியல் பூங்காவில் அடைக்கப்பட்டுள்ள சீதா, அக்பர் என்ற இரு சிங்கங்கள் பெயரை மாற்ற வேண்டும் என்று கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பூங்காவில் ஒரே பகுதியில் சீதா, அக்பர் என்ற இரு சிங்கங்களை அடைக்க எதிர்ப்பு தெரிவித்து உயர் நீதிமன்றத்தில் விஹெச்பி தாக்கல் செய்த மனுவின் கீழ் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

திரிபுரா மாநிலம் செபஹிஜாலா விலங்கியல் பூங்காவில் இருந்து மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியில் உள்ள பெங்கால் சஃபாரி பூங்காவிற்கு பிப்ரவரி 12-ம் தேதி இரண்டு சிங்கங்கள் கொண்டுவரப்பட்டன. இந்த இரண்டு சிங்கங்களில் ஏழு வயதுள்ள சிங்கத்துக்கு ‘அக்பர்’ என்றும், 6 வயதுள்ள சிங்கத்துக்கு ‘சீதா’ என்றும் பெயர் சூட்டப்பட்டது. இந்தப் பெயர்களுக்கு எதிராக விஸ்வ ஹிந்து பரிஷத் என்ற இந்து அமைப்பு கொல்கத்தா உயர் நீதிமன்றத்தை நாடியது.

மனுவில், “சிங்கத்துக்கு சீதா எனப் பெயர் சூட்டியத்தை மாற்ற வேண்டும்” என்று கோரிக்கை வைத்த விஸ்வ ஹிந்து பரிஷத், “மேற்கு வங்க வனத்துறை சிங்கங்களுக்கு பெயரிட்டுள்ளது. அக்பர் புகழ்பெற்ற முகலாய பேரரசர்களில் ஒருவர். சீதா வால்மீகியின் ராமாயணத்தில் ஒரு பாத்திரம்.

மேலும், இந்து மத வழக்கங்களில் சீதை தெய்வமாக கொண்டாடப்படுகிறார். எனவே, அக்பர்’ உடன் ‘சீதா’வை தங்க வைப்பது இந்து மதத்தை அவமதிக்கும் செயல் என்பதால் சிங்கங்களின் பெயர் மாற்றப்பட வேண்டும். அக்பரின் துணை சீதையாக இருக்க முடியாது” என்று கோரியது.

விஸ்வ ஹிந்து பரிஷத் தொடர்ந்த இந்த வழக்கின் விசாரணையின்போது, “உங்களது செல்லப் பிராணிக்கு இந்து கடவுள் அல்லது இஸ்லாத்தின் நபிகள் பெயரைச் சூட்டுவீர்களா?” என்று மேற்கு வங்க மாநில அரசின் வழக்கறிஞரிடம் நீதிபதி கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து சிங்கங்கள் பெயரை மாற்ற வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்த நீதிபதி, “இந்தப் பெயரை யார் வைத்தது? நீங்கள் ஒரு பொதுநல அரசு, மதச்சார்பற்ற அரசு. ஏன் சிங்கத்துக்கு சீதை, அக்பர் பெயரை வைத்து சர்ச்சையை உருவாக்க வேண்டும்? இந்த சர்ச்சை தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்.

சிங்கத்துக்கு அக்பர் என்று பெயர் வைப்பதை சீதா மட்டுமல்ல, நானும் ஆதரிக்கவில்லை. அக்பர் மிகவும் திறமையான மற்றும் உன்னதமான முகலாய பேரரசராக இருந்தார். மிகவும் வெற்றிகரமான மற்றும் மதச்சார்பற்ற முகலாய பேரரசர் அவர். இந்து, கிறிஸ்தவர், இஸ்லாமியர், மத போராளிகள், மரியாதைக்குரியவர்கள் பெயர்களை இனி விலங்குகளுக்கு சூட்ட வேண்டாம். சர்ச்சைகளை தவிர்க்க இரண்டு சிங்கங்களின் பெயர்களை மாற்றுங்கள்” என்று உத்தரவு பிறப்பித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.