திரிபுராவில், பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் கடந்த வாரம் நீதிமன்றத்தில் வாக்குமூலம் கொடுக்க வந்தார். திரிபுரா மாநிலம் கமல்பூர் கோர்ட்டில் வாக்குமூலம் கொடுப்பதற்காக வந்த அந்தப் பெண்ணுக்கு 28 வயது. அவரை 26 வயது நபர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்திருந்தார். அது தொடர்பான வழக்கில் வாக்குமூலம் கொடுக்க அப்பெண் கோர்ட்டிற்கு வந்திருந்தார்.
அந்தப் பெண்ணை நீதிபதி தனி அறைக்கு அழைத்துச் சென்று வாக்குமூலம் வாங்கிக் கொண்டிருந்தார். அவர், அப்பெண்ணுடன் வந்த பெண் காவலரை வெளியில் அனுப்பிவிட்டு, வாக்குமூலம் கொடுக்கப்பட்ட அறையின் கதவையும் பூட்டி விட்டு வாக்குமூலம் வாங்கினார். அந்நேரம், அப்பெண்ணை பாலியல் நோக்கத்துடன் நீதிபதி தொட்டு தொல்லை கொடுத்தார். இதையடுத்து அப்பெண் நீதிபதி அறையில் இருந்து வெளியில் ஓடி வந்து தன் கணவரிடம் புகார் செய்தார்.

கோர்ட் நடவடிக்கை என்று கூறி, டிஜிட்டல் முறையில் பாலியல் வன்கொடுமை செய்யும் வேலையில் நீதிபதி ஈடுபட்டதாக அப்பெண் தெரிவித்தார். அதோடு, இது குறித்து மாவட்ட நீதிபதியிடம் அப்பெண் புகார் செய்தார். அதன் அடிப்படையில் இக்குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க மூன்று பேர் கொண்ட கமிட்டியை மாவட்ட நீதிமன்றம் அமைத்திருந்தது. அக்கமிட்டி, சம்பவம் நடந்ததாகக் கூறப்படும் நீதிமன்றத்திற்கு வந்து, கோர்ட் ஊழியர்கள் உட்பட இதில் தொடர்புடைய அனைத்து தரப்பினரிடமும் வாக்குமூலம் வாங்கியது.
இந்நிலையில், திரிபுரா உயர் நீதிமன்றம், பாலியல் புகாரில் சிக்கிய நீதிபதியை இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. புதிய பணி எதுவும் அவருக்கு ஒதுக்கப்படவில்லை. அவர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.