பெங்களூரு: கர்நாடகாவின் முக்கிய இடங்களில் உள்ள ஓட்டல்கள், கோயில்கள், பேருந்துகளில் வரும் 9-ம் தேதி குண்டு வெடிக்கும் என்று முதல்வர் சித்தராமையா, அமைச்சர்கள், காவல் துறை உயர் அதிகாரிகளுக்கு மின்னஞ்சலில் மிரட்டல் கடிதம் வந்துள்ளது.
பெங்களூருவில் உள்ள ‘ராமேஸ்வரம் கஃபே’ என்ற பிரபல ஓட்டலில் கடந்த 1-ம் தேதி குண்டு வெடித்து, 10 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவக்குமார்,உள்துறை அமைச்சர் பரமேஷ்வரா, அமைச்சர்கள்பிரியாங்க் கார்கே, கே.ஜே.ஜார்ஜ் உள்ளிட்டோருக்கும், கர்நாடக டிஜிபி, பெங்களூரு மாநகர காவல் ஆணையர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கும் நேற்று மின்னஞ்சலில் ஒரு மிரட்டல் கடிதம் வந்துள்ளது.
‘நீங்கள் இதுவரை டிரெய்லரைதான் பார்த்தீர்கள். வரும் 9-ம் தேதி பிற்பகல் 2.48 மணிக்கு கர்நாடகாவின் முக்கிய இடங்கள், குறிப்பாக பெங்களூருவில் உள்ள ஓட்டல்கள், கோயில்கள், வணிக வளாகங்கள், ரயில்கள், பேருந்துகள் ஆகியவற்றில் குண்டு வெடிக்கும். இதை நாங்கள் நிறுத்த வேண்டுமானால், எங்களுக்கு 2.5 மில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.20 கோடி) தர வேண்டும்’ என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஷாகித் கான் என்ற பெயரில் இருந்து இந்த மின்னஞ்சல் வந்துள்ளது. இதுகுறித்து பெங்களூரு சைபர் கிரைம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த மின்னஞ்சலை அனுப்பியது யார்? எங்கிருந்து இது வந்துள்ளது? மின்னஞ்சல் அனுப்பப்பட்ட கணினியின் ஐபி முகவரி உள்ளிட்ட தகவல்களை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் ஆராய்ந்து வருகின்றனர்.