இந்திய அணிக்காக விளையாடிய தினேஷ் கார்த்திக், ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடுகிறார். அவர் வரும் ஐபிஎல் சீசன் 2024 தொடருக்குப் பிறகு முழுமையாக கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற திட்டமிட்டுள்ளார். 16 ஐபிஎல் சீசன்களில் விளையாடி இருக்கும் தினேஷ் கார்த்திக், 17வது ஐபிஎல் தொடருடன் தன்னுடைய தொழில்முறை கிரிக்கெட் மற்றும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கு விடை கொடுக்க இருக்கிறார்.
ஐபிஎல் தொடரை பொறுத்தவரையில் கடந்த 16 ஆண்டுகளாக டெல்லி கேப்பிட்டல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ஆர்சிபி அணிக்காக அவர் விளையாடி இருக்கிறார். தற்போது 39 வயதாகும் அவர், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதில்லை. இந்திய அணியில் இளம் வீரர்களே வாய்ப்புக்காக கடுமையாக போட்டி போட்டுக் கொண்டிருக்கும் நிலையில், இனி அவருக்கு இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைக்காது. தற்போது கிரிக்கெட் போட்டிகளுக்கு வர்ணனையாளராக இருக்கும் தினேஷ் கார்த்திக், வரும் ஐபிஎல் தொடருக்கு பிறகு முழுநேர வர்ணனையாளராக மாற இருக்கிறார்.
ஆர்சிபி அணிக்காக இந்த சீசனில் தினேஷ் கார்த்திக் விளையாடுவார். அதற்கான பயிற்சிகளையும் அவர் ஏற்கனவே தொடங்கிவிட்டார். ஐபிஎல் தொடரில் இதுவரை நடைபெற்ற அனைத்து சீசன்களிலும் விளையாடிய 7 வீர்களில் தினேஷ் கார்த்திக்கும் ஒருவர். இந்தப் பட்டியலில் எம்எஸ் தோனி, விராட் கோலி ரோஹித் சர்மா, ஷிகர் தவான், விருத்திமான் சாஹா மற்றும் மணீஷ் பாண்டே ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். எம்எஸ் தோனியும் வரவிருக்கும் ஐபிஎல் சீசனுக்குப் பிறகு ஓய்வு பெறக்கூடும் என்பதால் அவரோடு சேர்ந்து தினேஷ் கார்த்திக் தன்னுடைய கிரிக்கெட் பயணத்துக்கு விடை கொடுக்க இருக்கிறார்.
ஐபிஎல்-ல் இதுவரை 16 சீசன்களில் 240 போட்டிகளில் விளையாடி இருக்கும் அவர், 26 சராசரியுடன் 4516 ரன்கள் எடுத்துள்ளார். 20 அரை சதங்கள் அடித்துள்ளார். 2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் தினேஷ் கார்த்திக்கிற்கு மிகச்சிறப்பாக அமைந்தது. அந்த தொடரில் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் அதே ஆண்டில் நடைபெற்ற 20 ஓவர் உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடித்தார்.