Doctor Vikatan: சமீபத்தில் நடிகர் அஜித்துக்கு மூளையின் நரம்பில் ஏதோ பிரச்னை என்றும், அதற்காக ஐசியூவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வீடு திரும்பியதாகவும் செய்திகள் வந்தன. மூளை நரம்புகள் வீக்கமடைய காரணம் என்ன…. அதை எப்படி சரிசெய்வது?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம்

நடிகர் அஜித்துக்கு மூளையில் பயப்படும்படியான பிரச்னை எதுவும் இல்லை என்பது உறுதிபடுத்தப்பட்டு விட்டது. முதலில் மூளையில் கட்டி என்றும், அதற்காக சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் சொல்லப்பட்டது. உண்மையில் அவருக்கு காதுக்கும் மூளைக்கும் இடையில் உள்ள நரம்பில் வீக்கம் (nerve swelling) ஏற்பட்டதாகவும், அதை சிறிய அறுவை சிகிச்சையின் மூலம் குணப்படுத்தியதாகவும் செய்திகள் வந்திருக்கின்றன.
நடிகர் அஜித்துக்கு இந்தப் பிரச்னை வந்ததன் உண்மையான காரணம் நமக்குத் தெரியாது. ஆனால், பொதுவாக விபத்துகள் ஏற்பட்டதான் காரணமாக இப்படி நரம்புகளில் வீக்கம் ஏற்படலாம். உயரமான இடத்திலிருந்து கீழே விழுந்ததன் காரணமாகவும் ஏற்படலாம். ரொம்பவும் முரட்டுத்தனமான செயல்களில் ஈடுபடுவதாலும் வந்திருக்கலாம். நடிகர் என்பதால் ஸ்டன்ட் காட்சிகளில் தீவிரமாக ஈடுபட்டதால்கூட அஜித்துக்கு இந்தப் பிரச்னை வந்திருக்கக்கூடும்.

தவிர, அவர் பைக் பிரியர் என்பதும் நமக்கெல்லாம் தெரியும். அப்படி வேகமாக பைக் ஓட்டும்போது கீழே விழுந்து அடிபட்டிருந்தாலும் இப்படி ஏற்பட்டிருக்கலாம். தலையில் அடிபடும்போதும் இப்படி நிகழ வாய்ப்புகள் அதிகம். அதுபோன்ற நேரங்களில் மூளையிலுள்ள திரவத்தைச் சுற்றியோ, செல்களை சுற்றியோ கட்டி போல உருவாகலாம்.
அதன் தொடர்ச்சியாக சில நேரங்களில் நரம்புகளும் வீக்கமடையலாம். ஷீத் (sheath) எனப்படும் நரம்பின் உறைகளில் அடிபட்டு அந்த வீக்கம் வரலாம். இந்தப் பிரச்னைக்கு சில நேரங்களில் ஓய்வு மட்டுமே குணம் தரும். சிலருக்கு மருந்துகள் பரிந்துரைக்கப்படலாம். இன்னும் சிலருக்கு அறுவை சிகிச்சை தேவைப்படலாம். இந்தப் பிரச்னைகளில் தலைவலி உணரப்படலாம். கண்களுக்குப் போகிற நரம்பில் வீக்கம் ஏற்பட்டால் பார்வை மங்கலானதுபோல உணரலாம்.

காதுகளுக்குப் போகிற நரம்பில் வீக்கம் ஏற்பட்டால் கேட்கும் திறன் குறைந்திருக்கலாம், தலைச்சுற்றலும் இருக்கலாம். அறிகுறிகளை உணர்ந்து எம்.ஆர்.ஐ சோதனை செய்து பார்க்கும்போது மேற்குறிப்பிட்ட நரம்பு வீக்க பிரச்னை பாதித்திருப்பது தெரிய வரும். அதன் அடிப்படையில் மருத்துவர் சிகிச்சைகளைப் பரிந்துரைப்பார்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.