மேற்கு வங்கத்தில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி நேற்று அறிவித்தது. இதில் பிஷ்னுபூர் தொகுதியில் சுஜாதா மொண்டல் என்ற பெண் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதே தொகுதியில் பா.ஜ.க சார்பாக ஏற்கெனவே செளமித்ர கான் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். சுஜாதா மொண்டலும், செளமித்ர கானும் விவாகரத்தான கணவன் மனைவியாவார். இருவரும் பிரிவதற்கு முன்பு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில்தான் இருந்தனர். 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன்பு செளமித்ர கான் பா.ஜ.க-வில் சேர்ந்தார்.

அப்போது செளமித்ர கானுக்கு ஆதரவாக சுஜாதா பிரசாரமும் செய்தார். ஆனால் 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. சுஜாதா திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். இதையடுத்து செளமித்ர கான் தனது மனைவியை விவாகரத்து செய்துவிட்டார். அதன் பிறகு இருவரும் வேறு வேறு கட்சிகளுக்காக வேலை செய்ய ஆரம்பித்தனர். தற்போது இருவரையும் இரண்டு அரசியல் கட்சிகளும் வேட்பாளர்களாக அறிவித்திருக்கின்றன.
தேர்தல் பிரசாரத்தில் இருவரும் எப்படி பிரசாரம் செய்யப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு வாக்காளர்களிடம் எழுந்துள்ளது. அதேசமயம் திரிணாமுல் காங்கிரஸ் பீகார் மற்றும் குஜராத் போன்ற மாநிலங்களில் இருந்து வேட்பாளர்களை இறக்குமதி செய்வதாக பா.ஜ.க குற்றம்சாட்டி இருக்கிறது.

பா.ஜ.க எம்.பி திலிப் கோஷ் இது தொடர்பாக அளித்த பேட்டியில், ”மேற்கு வங்கத்தில் படித்தவர்களை நம்பாமல் கிரிமினல்களை நம்புகிறது” என்று குறிப்பிட்டுள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் குஜராத்தை சேர்ந்த யூசுப் பதானை மேற்கு வங்கத்தில் வேட்பாளராக நியமித்திருக்கிறது.