`தமிழகத்துக்குத் தண்ணீர் என்ற கேள்விக்கே இடமில்லை!' – கர்நாடக துணை முதல்வர் சிவக்குமார் திட்டவட்டம்!

எலக்ட்ரானிக் சிட்டி என்று அழைக்கப்படும் கர்நாடகாவின் தலைநகர் பெங்களூரு தண்ணீர் தட்டுப்பாட்டால் தள்ளாடிவருகிறது. தென்மேற்கு பருவமழையும், வடகிழக்கு பருவமழையும் பொய்த்துப் போய், நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, போர்வெல்களிலும் தண்ணீர் வறண்டு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாகக் காரணம் சொல்லப்படுகிறது.

தண்ணீர் தட்டுப்பாடு

1.4 கோடி மக்கள் வசிக்கும் பெங்களூருவில் வழக்கமாக நாள் ஒன்றுக்குச் செலவாகும் நீரில் 1,500 மில்லியன் லிட்டர் தண்ணீர் பற்றாக்குறையாக இருப்பதால், தற்போதைய சூழலைச் சமாளிக்க பல்வேறு நடவடிக்கைகளை கர்நாடக அரசு மேற்கொண்டுவருகிறது. குறிப்பாக, வாகனங்களை சுத்தம் செய்தல், தோட்டம் பராமரிப்பு, கட்டுமானம், சாலைப் பணிகள் மற்றும் பிற பொழுதுபோக்கு நோக்கங்களுக்காக குடிநீரைப் பயன்படுத்தத் தடை விதித்திருக்கிறது.

இப்படியிருக்க, மாநிலத்திலேயே தண்ணீர் தட்டுப்பாடாக இருக்கும் நேரத்தில், கிருஷ்ணராஜ சாகர் (KRS) அணையிலிருந்து தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறந்து விடப்படுவதாக ‘Raitha Hitarakshana Samiti’ அமைப்பினர் மாண்டியாவில் நேற்று போராட்டம் நடத்தினர். இந்த நிலையில், தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் என்ற கேள்விக்கே இடமில்லை என கர்நாடக துணை முதல்வரும், நீர்வளத்துறை அமைச்சருமான டி.கே.சிவக்குமார் தெரிவித்திருக்கிறார்.

கர்நாடகா துணை முதல்வர் டி.கே.சிவக்குமார்

தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிடப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டுக்குப் பதிலளிக்கும் வகையில் செய்தியாளர்களிடம் இன்று பேசிய டி.கே.சிவக்குமார், “எத்தகைய சூழலிலும் தமிழ்நாட்டுக்கு காவிரி நீரைத் திறந்துவிடுவது என்ற கேள்விக்கே இடமில்லை. இதுவரை தண்ணீர் திறப்பை நாங்கள் தொடங்கவில்லை. தமிழ்நாட்டுக்குத் திறந்துவிடப்படும் நீரின் அளவு மிக நுணுக்கமாகப் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. இன்று தண்ணீர் திறந்து விடப்பட்டாலும், இலக்கை சென்றடைய நான்கு நாள்கள் ஆகும். அதேசமயம், தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் திறக்கும் அளவுக்கு இந்த அரசில் நாங்கள் முட்டாள்கள் இல்லை” என்று தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.