டி20 உலகக் கோப்பை அணியில் விராட் கோலிக்கு இடம் இல்லை எனத் தகவல்.. ரசிகர்கள் அதிர்ச்சி

Virat Kohli vs T20 World Cup 2024: டி20 உலகக் கோப்பை அணியில் இடம் பிடிக்க வேண்டும் என்றால் விராட் கோலி ஐபிஎல் 2024 தொடரில் சிறப்பாக செயல்பட வேண்டும். இல்லையென்றால் டி20 உலகக் கோப்பை அணியில் இருந்து விராட் கோலியை நீக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றனர். டி20 உலகக் கோப்பைக்கு விராட் கோலியை தேர்வு செய்வதில் அணியின் தேர்வாளர்கள் ஆர்வம் காட்டவில்லை. ஏனெனில் அனுபவம் வாய்ந்த விராட் கோலி அணியின் தேவைகளை சமாளிக்கத் தவறிவிட்டார் என்று நிர்வாகம் நினைப்பதாக கிரிக்கெட் வட்டாரங்கள் கூறுகின்றனர். 

2022 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு விராட் கோலி டி20ஐ கிரிக்கெட்டில் விளையாடவில்லை. இருப்பினும், ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20ஐ தொடருக்கான ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் அவர் தேர்வு செய்யப்பட்டார். ஆனால் முதல் இரண்டு போட்டிகளில் விராட் கோலி விளையாடவில்லை. மூன்றாவது டி20 போட்டியில் மட்டுமே விளையாடினர். அதன்பிறகு டி20 போட்டியில் அவர் பங்கேற்கவில்லை. 

டி20 உலகக்கோப்பை இந்திய அணிக்கு ரோஹித் சர்மா கேப்டன்

இந்தாண்டு ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா செயல்படுவார் என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா உறுதிப்படுத்தினார். விராட் கோலியின் டி20ஐ எதிர்காலம் குறித்து கேட்கப்பட்டபோது அவர் பதில் எதுவும் கூறாமல் கடந்து சென்றார். 

டி20 உலகக் கோப்பை தொடரில் விராட் கோலி வாய்ப்பு கிடைக்குமா?

தற்போது டி20 உலகக் கோப்பை அணியில் விராட் கோலி இடம் பெறுவார? இல்லையா? என்பது குறித்து முடிவு செய்யும் பொறுப்பை பிசிசிஐ தலைமை தேர்வாளர் அஜித் அகர்கரிடம் விட்டுவிட்டதாக தகவல்கள் கூறுகிறது. இது மிகவும் நுட்பமான விஷயமாக இருப்பதால் பலர் இதில் ஈடுபட விரும்பவில்லை. 

மறுபுறம் டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெறவுள்ள அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் உள்ள மைதானங்கள்  மெதுவான விக்கெட்டுக்கு சாதகமாக இருப்பதால், அதில் விராட் கோலிக்கு எதிர்பார்க்கும் அளவுக்கு செயல்திறன் இருக்காது என்று நிர்வாகம் கருதுகிறது, இதனால் மூத்த வீரர் விராட் கோலிக்கு பதிலாகா இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கலாம் என அஜித் அகர்கர் ஆலோசனை செய்து வருவதாகக் கூறப்படுகிறது. டி20 கிரிக்கெட்டில் சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ரிங்கு சிங் மற்றும் ஷிவம் துபே போன்ற இளம் வீரர்கள் கோலியை விட நன்றாக செயல்படுவதாக பிசிசிஐ கருதுகிறது.

ஐபிஎல் தொடரில் விளையாடும் விராட் கோலி

தற்போது இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலிக்கு டி20 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்கும் இந்திய அணியில் இடம் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒருவேளை ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடும் விராட் கோலி, சிறப்பாக செயல்பட்டால் டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் அவருக்கு இடம் கிடைக்க வாய்ப்பு உண்டு. 

ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024 தொடர் எப்பொழுது?

வரும் ஜூன் மாதம் தொடங்க உள்ள ஐசிசி டி20 உலகக்கோப்பை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெறவுள்ளது. இத்தொடரில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்கவுள்ளன. ஒரு பிரிவுக்கு ஐந்து அணிகள் என மொத்தம் நான்கு (ஏ, பி, சி, டி) பிரிவுகளின் கீழ் அணிகள் பட்டியலிடப்பட்டு உள்ளன. அதில் இந்தியா அணி ‘ஏ’ பிரிவில் உள்ளது.

இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா மற்றும் கனடா அணிகள் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ளன. ஜூன் 5 ஆம் தேதி கனடாவுக்கு எதிராக இந்தியா தனது டி20 உலகக் கோப்பை தொடரில் முதல் ஆட்டத்தை தொடங்கும். ஜூன் 9 ஆம் தேதி பாகிஸ்தானையும், ஜூன் 12 ஆம் தேதி அமெரிக்காவையும், ஜூன் 15 ஆம் தேதி கனடாவையும் எதிர்கொள்கிறது. 

பத்து ஆண்டுகளாக ஐசிசி கோப்பையை இந்திய அணி வெல்லவில்லை

இந்திய அணியை பொறுத்த வரை கடைசியாக 2013 ஆம் ஆண்டு எம்எஸ் தோனி தலைமையிலான இந்திய அணி ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை வென்றதில் இருந்து, தற்போது வரை இந்தியா அணி ஐசிசி கோப்பையை வெல்லவில்லை. இதனால் இந்தமுறை இந்திய அணி கோப்பையை வெல்லும் என்ற எதிர் பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.