இலங்கைக்கான தென்கொரியத் தூதுவர் மியோன் லீ அண்மையில் (06) சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன அவர்களைப் பாராளுமன்றத்தில் சந்தித்தார். இந்தச் சந்திப்பின் போது எதிர்க்கட்சித் தலைவர் கௌரவ சஜித் பிரேமதாச, இலங்கை – தென்கொரிய பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ தயாசிறி ஜயசேகர, பிரதித் தலைவர் கல்வி இராஜாங்க அமைச்சர் கௌரவ அரவிந்த குமார் மற்றும் பொருளாளர் கௌரவ ஜே.சி.அலவத்துவல ஆகியோரும் கலந்துகொண்டனர். பாராளுமன்றத்தின் பதில் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்னவும் இச்சந்தப்பத்தில் இணைந்துகொண்டார்.
இங்கு கருத்துத் தெரிவித்த தென்கொரிய தூதுவர், இலங்கை மாணவர்களுக்கு தென்கொரியாவில் உயர்கல்விக்கு அதிக வாய்ப்புக்களை எதிர்காலத்தில் வழங்குவதற்கு எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்டார். அத்துடன், எதிர்வரும் ஜூன் மாதம் இந்நாட்டு கல்வி அமைச்சு மற்றும் பல்கலைக்கழகங்களின் ஆதரவுடன் கொரிய கல்விக் கண்காட்சி நடத்தப்படவுள்ளதாகவும் கூறினார். இலங்கையில் உள்ள பாடசாலைகளில் கொரிய மொழி கற்பித்தலை அதிகரிக்க வேண்டியது அவசியமானது எனவும், இதற்கு தேவையான ஆதரவை வழங்குமாறும் கல்வி இராஜாங்க அமைச்சர் கோரிக்கை விடுத்தார். எதிர்காலத்தில் இதற்குத் தேவையான வசதிகள் வழங்கப்படும் எனக் கொரியத் தூதுவர் தெரிவித்தார்.
இலங்கையர்களுக்குத் தென்கொரியா வழங்கிவரும் தொழில்வாய்ப்புக்களுக்கு நன்றி தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் கௌரவ சஜித் பிரேமதாச, தனது தந்தையாரான மறைந்த ரணசிங்க பிரேமதாச அவர்கள் ‘கம் உதாவ’ நிகழ்ச்சித்திட்டத்தைத் தயாரிக்கும்போது அப்போது கொரியாவின் ஜனாதிபதியாக இருந்த பார்க் சூங் ஹீ (Park Chung Hee) அவர்கள் அந்நாட்டில் நடைமுறைப்படுத்திய செயற்றிட்டங்களையே பின்பற்றியதாகவும் கூறினார்.
மேலும், தென்கொரியாவில் நடைபெற உள்ள தேர்தல் குறித்தும் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டது. எதிர்காலத்தில் இலங்கையர்களுக்கான பயிற்சித் திட்டங்களை தென்கொரிய அரசாங்கம் ஏற்பாடு செய்ய வேண்டியதன் அவசியத்தை சபாநாயகர் சுட்டிக்காட்டியிருந்ததுடன், இரு நாடுகளுக்குமிடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்தும் கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றன.
மேலும், பல்வேறு சந்தர்ப்பங்களில் இலங்கை – தென்கொரியா பாராளுமன்ற நட்புறவு சங்கம் வழங்கிய ஆதரவுகளுக்கும் தென்கொரியத் தூதுவர் நன்றி தெரிவித்தார்.