ஆந்திராவில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுடன், சேர்த்து சட்டமன்றத்துக்கும் தேர்தல் நடைபெறவிருக்கிறது. அங்கு, முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம், நடிகர் பவன் கல்யாண் தலைமையிலான ஜனசேனா, மத்தியில் ஆளும் பா.ஜ.க ஆகிய மூன்று கட்சிகளும் ஒன்றாக களமிறங்கியிருக்கின்றன.

நாடாளுமன்றத்தில் மசோதாக்களை நிறைவேற்றுவதற்கு ஆதரவு அளிப்பது உட்பட மோடி அரசுக்கு பக்கபலமாக இருந்துவந்த ஆந்திரா முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸுக்கு நேரெதிராக சந்திரபாபு நாயுடு இருக்கிறார். அவரோடு பா.ஜ.க கைகோத்திருக்கிறது.
பா.ஜ.க-வுக்கு ஆறு மக்களவைத் தொகுதிகளையும், ஜன சேனாவுக்கு இரண்டு மக்களவைத் தொகுதிகளையும் தெலுங்கு தேசம் ஒதுக்கியிருக்கிறது. மீதியிருக்கும் 17 தொகுதிகளில் தெலுங்கு தேசம் போட்டியிடுகிறது. ஆந்திராவில் மொத்தம் 175 சட்டமன்றத் தொகுதிகள் இருக்கின்றன. அவற்றில், 30 தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கியிருக்கும் தெலுங்கு தேசம், மற்ற இடங்களில் தன் வேட்பாளர்களை நிறுத்துகிறது.

சந்திரபாபு நாயுடுவுக்கு 74 வயதாகிறது. வரும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று ஜெகன்மோகன் ரெட்டியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று ஆர்வத்துடன் வியூகங்களை வகுத்துவருகிறார் சந்திரபாபு நாயுடு. அந்த வகையில், பா.ஜ.க-வுடனான கூட்டணி தமது வெற்றிக்கு கைகொடுக்கும் என்ற உற்சாகத்தில் சந்திரபாபு நாயுடு இருக்கிறார்.
‘ஆந்திரா மிக மோசமாக அழிக்கப்பட்டிருக்கிறது. இந்தச் சூழலில், தெலுங்கு தேசம், பா.ஜ.க கூட்டணி தேசத்துக்கும், மாநிலத்துக்கும் நன்மை பயக்கும்’ என்று சந்திரபாபு நாயுடு கூறியிருக்கிறார். அதேபோல, என்.டி.ஏ 400 இடங்களுக்கு மேல் வெல்லும் என்ற பிரதமர் மோடியின் கனவு நனவாக தெலுங்கு தேசம், ஜன சேனாவுடனான கூட்டணி கைகொடுக்கும் என்று பா.ஜ.க-வினர் நம்புகிறார்கள்.

இந்த மூன்று கட்சிகளிடையே கூட்டணி அமைந்த பிறகு கூட்டாக அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், ‘நாட்டின் வளர்ச்சிக்காக கடந்த பத்தாண்டுகளாக பிரதமர் மோடி ஓய்வின்றி உழைத்துவருகிறார்’ என்று மோடி ஆட்சியின் புகழைப் பாடியிருக்கிறார்கள். ஆனால், என்.டி.ஏ கூட்டணியிலிருந்து சந்திரபாபு நாயுடு வெளியேறியதற்கு காரணம், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்கப்படும் என்ற வாக்குறுதியை மோடி அரசு நிறைவேற்றாத காரணத்தால்தான். எனவே, இந்த விவகாரத்தை ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸும், காங்கிரஸ் கட்சியும் முக்கிய ஆயுதமாகக் கையிலெடுக்கின்றன.
2019-ம் ஆண்டு 22 மக்களவைத் தொகுதிகளில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸும், மூன்று தொகுதிகளில் தெலுங்கு தேசமும் வெற்றிபெற்றன. இந்த முறை, ‘ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சிக்கு எதிரான மனநிலையில் மக்கள் இருப்பதால், எங்கள் கூட்டணிதான் வெற்றிபெறும்’ என்று சந்திரபாபு நாயுடு கூறுகிறார். சட்டமன்ற தேர்தலுக்கான தனது இரண்டாவது வேட்பாளர் பட்டியலை அவர் வெளியிட்டிருக்கிறார். இதுவரை, 128 தொகுதிகளுக்கு தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளர்களை அறிவித்திருக்கிறது.

ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியலை மார்ச் 16-ம் தேதி வெளியிடவிருக்கும் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, அன்றைய தினமே தேர்தல் பிரசாரத்தையும் தொடங்குகிறார். ஸ்ரீகாகுளம் மாவட்டத்திலுள்ள இட்சாபுரத்திலிருந்து அவரது பிரசாரம் தொடங்குகிறது. அடுத்த 60 நாள்களுக்கான தேர்தல் பிரசாரப் பயணத்தின் திட்டத்தை வகுத்திருக்கும் ஜெகன்மோகன் ரெட்டி, தினமும் இரண்டு முதல் மூன்று இடங்களில் பிரசாரம் செய்யவிருக்கிறார்.
காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவராக ஒய்.எஸ்.ஷர்மிளா அறிவிக்கப்பட்ட பிறகு, தொடர்ச்சியாக அவர் மக்களை சந்தித்துவருகிறார். சி.பி.எம்., சி.பி.ஐ ஆகிய இடதுசாரி கட்சிகளுடன் கூட்டணி அமைத்து நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களை காங்கிரஸ் சந்திக்கிறது.

தெலுங்கு தேசமும், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸும் ஆந்திராவை சீரழித்துவிட்டதாக ஷர்மிளா குற்றம்சாட்டிவருகிறார். மேலும், ஆந்திரா மக்களுக்கான நீதியைப் பெற்றுத்தருவேன் என்று மக்கள் மத்தியில் வாக்குறுதி அளித்துவருகிறார். இப்படியாக, ஆந்திராவில் ஏற்பட்டிருக்கும் மும்முனைப் போட்டி, தேர்தல் களத்தை விறுவிறுப்பாக்கியிருக்கிறது.!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY