திருவனந்தபுரம்: “காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகளை ஒழிப்பதுதான் கேரளாவைக் காப்பாற்றுவதற்கான ஒரே தீர்வு. இடதுசாரிகளும், காங்கிரஸும் மாநிலத்தில் எதிரிகள் போல் நடிக்கிறார்கள். ஆனால் டெல்லியில் ஒருவரையொருவர் கட்டிப்பிடித்து கொள்கின்றனர்.” என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.
திருவனந்தபுரத்தில் பாஜக பொதுக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “கடந்த தேர்தலில் கேரள மக்கள் எங்களை இரட்டை இலக்க வாக்கு சதவீத கட்சியாக மாற்றினார்கள். இந்த தேர்தலில் இரட்டை இலக்க சீட்களை வழங்கும் நாட்கள் வெகு தொலைவில் இல்லை.
கேரளத்தில் ஆட்சி செய்த ஊழல் மற்றும் திறமையற்ற அரசுகளால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இடதுசாரி மற்றும் காங்கிரஸ் அரசாங்கங்கள் ரப்பர் விவசாயிகளின் அவல நிலையை கண்டும் காணாமலும் விட்டுவிட்டன. கேரளாவில் சட்டம் ஒழுங்கு மிகவும் மோசமான நிலையில் உள்ளது.
சர்ச் பாதிரியார்கள் கூட பாதுகாப்பாக இல்லை என்பது மிக துரதிர்ஷ்டவசமானது. மேலும், கேரள கல்லூரிகள் கம்யூனிஸ்டுகளின் குண்டர்களின் மையங்களாக மாறிவிட்டன. பெண்கள், இளைஞர்கள் என கேரளாவில் உள்ள ஒவ்வொரு பிரிவினரும் அச்சத்தில் வாழ்கின்றனர். ஆனால், மாநிலத்தை ஆளுவோர் நிம்மதியாக உறங்குகிறார்கள்.
காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகளை ஒழிப்பதுதான் கேரளாவைக் காப்பாற்றுவதற்கான ஒரே தீர்வு. இடதுசாரிகளும், காங்கிரஸும் மாநிலத்தில் எதிரிகள் போல் நடிக்கிறார்கள். ஆனால் டெல்லியில் அவர்கள் ஒருவரையொருவர் கட்டிப்பிடித்து கொள்கின்றனர். காங்கிரஸ், இடதுசாரிகள் இரண்டுமே குண்டர்கள். கேரள மக்களை ஏமாற்றிவிட்டனர்.
தற்போது கேரள மக்கள், குறிப்பாக இளைஞர்களும் பெண்களும் யதார்த்தத்தை புரிந்து கொண்டுள்ளனர். கேரள மக்கள் முற்போக்கு மற்றும் தொலைநோக்கு பார்வை கொண்டவர்கள். ஆனால் காங்கிரஸ் இன்னும் 19ம் நூற்றாண்டுக்கான எண்ணங்களுடன் வாழ்கிறது.
அதேபோல், இடதுசாரி சித்தாந்தம் முற்றிலும் காலாவதியான சித்தாந்தம். இந்த இரு கட்சிகளின் பொதுவான கலாச்சாரம் கேரள மக்களின் சிறந்த மரபுகள் மற்றும் முற்போக்கு மனநிலைக்கு நேர் எதிரானது. இரு கட்சிகளுமே மக்கள் நம்பிக்கைகளை சீரழிப்பதற்கு பெயர் பெற்றவர்கள்.
அவர்கள் தொடர்ந்து சமூகத்தை சீரழிப்பதிலும் வாக்கு வங்கி அரசியலிலும் ஈடுபட்டு வருகின்றனர். கேரள கலாச்சாரம் அமைதிக்கு பெயர் பெற்றது. ஆனால் இடதுசாரி மற்றும் காங்கிரஸ் கட்சிகள் அரசியல் வன்முறையில் ஈடுபடுகின்றன.
ஜனநாயகத்தின் மாபெரும் திருவிழாவை விரைவில் காணவிருக்கிறோம். இந்த முறை கேரளாவின் பாஜக மீதான அன்பு மிகப்பெரிய ஆதரவாக மாறும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இந்த முறை முந்தைய சாதனைகள் அனைத்தும் முறியடிக்கப்படும் என்று உறுதியாக நம்புகிறேன். இந்த முறை கேரளா பாஜகவை பெரிதும் ஆதரிக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்” என்று பேசினார்.