மனித உயிருக்கு அச்சுறுத்தலாகக் கருதப்படும் 23 ஆக்ரோஷமான வெளிநாட்டு நாய் இனங்களின் (Foreign Dogs) இறக்குமதி, விற்பனை மற்றும் இனப்பெருக்கத்திற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

தடைசெய்யப்பட்ட நாய் இனங்களின் பட்டியலில், பிட்புல் டெரியர், டோசா இனு, அமெரிக்கன் ஸ்டாஃபோர்ட்ஷையர் டெரியர், ஃபிலா பிரேசிலிரோ, டோகோ அர்ஜென்டினோ, அமெரிக்கன் புல்டாக், போர்போயல், கங்கல், ரஷியன் ஷெப்பர்ட், டார்ன்ஜாக், சர்ப்லானினாக், ஜப்பானிய டோசா அன்ட் அகிடா, மாஸ்டிஃப்ஸ், ராட்வீலர், டெரியர்ஸ், டெரியர்ஸ் ரிட்ஜ்பேக், வூல்ஃப் டாக், கனாரியோ, அக்பாஷ் நாய், மாஸ்கோ கார்டு நாய், கேன் கோர்சோ போன்ற நாய் இனங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
டெல்லி உயர் நீதிமன்றத்தில் பீட்டா (PETA) அமைப்பு ரிட் மனு தாக்கல் செய்ததையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாய்க் கடியால் ஏற்படும் ஆபத்துகளையும் மரணங்களையும் குறிப்பிட்டிருந்த பீட்டா, `மனிதர்களுக்கும், நாய்களுக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும். பிட் புல் மற்றும் பிற நாய் இனங்கள் கொடூர நாய் இனங்களாக பார்க்கப்படுகின்றன. இந்த நாய் இனங்கள் கைவிடப்படும்போது அவற்றை பாதுகாக்க முடியாமல் போகிறது. எனவே இவற்றை தடை செய்ய வேண்டும். இதனால் மக்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களும் தடுக்கப்படும்’ என்றும் குறிப்பிட்டு இருந்தது.

மீன்வளம், கால்நடை வளர்ப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சகத்தின் இணைச் செயலாளர் டாக்டர் ஓ.பி.சௌத்ரி, 23 வகை வெளிநாட்டு நாய்களுக்கான தடையை அமல்படுத்துவதை உறுதி செய்யுமாறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்களுக்குக் கடிதம் அனுப்பியுள்ளார். மேலும், வீடுகளில் ஏற்கனவே வளர்க்கப்படு வரும் இவ்வகை நாயினங்களுக்கு கருத்தடை செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது.