நாக்பூர்: நாக்பூரில் நடந்த ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் முக்கிய முடிவுகளை எடுக்கும் அகில இந்திய பிரதிநிதி சபா குழுவின் கூட்டத்தில், அயோத்தி ராமர் கோயில் தொடர்பாக முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மஹாராஷ்டிராவின் நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் முக்கிய முடிவுகளை எடுக்கும் அகில இந்திய பிரதிநிதி சபா குழுவின் கூட்டம் கடந்த 15 முதல் 17 வரை நடந்தது. இக்கூட்டத்தில் பா.ஜ., தலைவர் நட்டா, பொதுச்செயலாளர் சுனில் பன்சால், அமைப்புச்செயலாளர் பி.எல் சந்தோஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் அயோத்தியில் ராமர் கோயில் பணிக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தும், ராமரின் வழிகாட்டுதலின் படி செயல்பட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதில் முக்கிய அம்சங்கள்
* ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடந்த ஜன.,22 நாளானது, உலக வரலாற்றின் ஒரு அற்புதமான நாள். அந்நாள் பொன் எழுத்துகளால் எழுதப்பட்டது.
* இக்கோயில் கட்டுவது என்ற தீர்மானம். நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக நடந்த ஹிந்து சமுதாயத்தினரின் போராட்டம், தியாகம், ஆன்மிகவாதிகள் மற்றும் மகான்களின் வழிகாட்டுதல், உறுதியான நிலைப்பாடு மூலம் எட்டப்பட்டது.
* அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் அனைத்து மதங்கள், பிரிவுகள் மற்றும் பாரம்பரியங்களைச் சேர்ந்த தலைவர்கள், அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
ராமரின் கொள்கைகளின் அடிப்படையில் இணக்கமான மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட தேசிய வாழ்க்கையை கட்டியெழுப்புவதற்கான சூழலை உருவாக்குவதை இது சுட்டிக்காட்டுகிறது. இது பாரதத்தின் தேசிய மறுமலர்ச்சியின் துவக்கத்திற்கான அறிகுறியாகும்.
* கரசேவகர்கள், ஆராய்ச்சியாளர்கள், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், சிந்தனைத் தலைவர்கள், சட்ட வல்லுநர்கள், ஊடகங்கள், ஹிந்து சமுதாயம் மற்றும் அரசு நிர்வாகம் ஆகியன குறிப்பிடத்தக்க பங்களிப்பு அளித்தன.
* இந்த போராட்டத்தில் உயிர் தியாகம், செய்த தியாகிகளுக்கு அகில பாரத பிரதிநிதி சபை வீரவணக்கம் செலுத்தி நன்றி தெரிவித்துக் கொள்கிறது.
* கும்பாபிஷேகம் மூலம் அந்நிய ஆட்சி காலத்தில் எழுந்த நம்பிக்கையின்மையில் இருந்து நமது சமூகம் வெளியே வருகிறது. ஒட்டு மொத்த சமூகமும் ஹிந்துத்துவாவை அங்கீகரித்து அதன்படி வாழத் தயாராகி வருகிறது.
* ராமரின் வாழ்க்கையானது, சமுதாயத்திற்காகவும், தேசத்திற்காகவும் தியாகம் செய்யவும், சமூகக் கடமைகளில் உறுதியாக இருக்கவும் நம்மைத் தூண்டுகிறது.
* அவரின் ஆட்சி உலக வரலாற்றில் ‛ராம ராஜ்யம்’ என்ற பெயருடன் ஒரு இடத்தை பெற்றுள்ளது. அதன் லட்சியங்கள் உலகளாவியவை மற்றும் நித்தியமானவை.
* பெருகி வரும் வன்முறை, கொடூரம் உள்ளிட்ட உலகம் எதிர்கொள்ளும் சவால்களுக்கு ‛ராமராஜியம்’ தீர்வு தரும்.
* ராமரின் லட்சியங்களைத் தன் வாழ்வில் புகுத்துவதற்கு அனைவரும் உறுதிமொழி எடுக்க வேண்டும். இதனால், ராமர் கோயில் கட்டியதற்கான நோக்கம் அர்த்தமுள்ளதாக இருக்கும்.
* ராமரின் வாழ்க்கையில் பிரதிபலிக்கும் தியாகம், பாசம், நீதி, வீரம், நல்லெண்ணம் மற்றும் நியாயம் போன்ற தர்மத்தின் முக்கியமானவற்றை மீண்டும் சமூகத்தில் புகுத்துவது அவசியம்.

* மோதல்கள் மற்றும் பாகுபாடுகளை ஒழித்து நல்லிணக்கத்தின் அடிப்படையில், ஒரு சமுதாயத்தை கட்டி எழுப்புவதே உண்மையான ராம வழிபாடாக இருக்கும்.
* சகோதரத்துவம், கடமை உணர்வு, மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையிலான திறன்மிக்க பாரதத்தை உருவாக்க அனைத்து இந்தியர்களுக்கும் அகில பாரதிய பிரதிநிதி சபைஅழைப்பு விடுக்கிறது. இதன் மூலம் உலகளாவிய நலனை உறுதி செய்யும் உலகளாவிய ஒழுங்கை வளர்ப்பதில் பாரதம் முக்கிய பங்கு வகிக்க முடியும். இவ்வாறு அந்த தீர்மானத்தில் கூறப்பட்டு உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்