தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பதவிகளை ராஜினாமா செய்த தமிழிசை சௌந்தரராஜன், மீண்டும் முழுநேர அரசியலுக்குத் திரும்பியிருக்கிறார். இன்று தமிழ்நாடு பா.ஜ.க தலைமை அலுவலகத்துக்குச் சென்ற தமிழிசை சௌந்தரராஜனை பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் வரவேற்றனர். பின்னர் கட்சியில் இணைவதற்கான உறுப்பினர் படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்து, உறுப்பினர் அட்டையைப் பெற்றுக்கொண்டார்.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, “எங்கிருந்து சென்றேனோ அங்கேயே திரும்பி வந்திருக்கிறேன். பா.ஜ.க தலைவராக இருந்து, ஆளுநராக உயர்ந்து, மீண்டும் தொண்டராக மாறுவதெல்லாம் பா.ஜ.க-வில் மட்டும்தான் நடக்கும். 400 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் நானும் ஓர் நாடாளுமன்ற உறுப்பினராக வேண்டும் என்பதற்காக இங்கு இணைந்திருக்கிறேன்.
ஒரு சதவிகிதம்கூட ஆளுநர் பதவியை துறந்துவிட்டேன் என வருந்தவில்லை. அதைவிட தொண்டராக இருப்பதில்தான் மகிழ்ச்சி. கட்சி என்னை எந்தத் தொகுதியில் நிற்கக் கூறுகிறதோ அந்தத் தொகுதியில் போட்டியிடுவேன். எனக்கு மக்கள் பணியாற்றவேண்டும் என்ற விருப்பம் உண்டு. அதனால் இங்கு மீண்டும் தொண்டராக இணைந்திருக்கிறேன். பா.ஜ.க அளவிற்கு பெண்களுக்கு முக்கியத்துவம் வழங்கும் கட்சியை உங்களால் பார்க்க முடியாது. தமிழ்நாட்டில் பா.ஜ.க கடுமையாக வளர்ந்திருக்கிறது. இத்தனைக் கூட்டணிக் கட்சிகளை பா.ஜ.க-வை நோக்கி அழைத்து வந்திருக்கிறார்கள். இது வளர்ச்சிதானே.

ஒரு மாநிலத்தில் ஆளுநருக்கு என்ன குறை நடந்தாலும் முதல்வரை யாரும் கேள்வி கேட்கமாட்டார்கள். ஆளுநர் பதவி தேவையே இல்லையென்றால் ஆட்சியில் இருந்தபோதே அந்தப் பதவியை இல்லாமல் ஆக்கியிருக்கலாமே… எதிர்க்கட்சியாக இருந்தபோதெல்லாம் ஏன் ஆளுநர் மாளிகை கதவைத் தட்டிக்கொண்டிருந்தார்கள்… எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஒரு நிலைபாடு, ஆளுங்கட்சியாக இருக்கும்போது ஒரு நிலைபாடு, இதை மக்கள் புரிந்திருக்கிறார்கள்.
தமிழ்நாடு அரசு ஆளுநரை நட்பாக நடத்தவில்லை என்பதுதான் என் குற்றச்சாட்டு. அ.தி.மு.க இல்லாமல் எங்களால் தேர்தலைச் சந்திக்க முடியும் என்ற அளவிற்கு வளர்ந்திருக்கிறோம். இ.வி.எம் மூலம்தான் பா.ஜ.க வெற்றி பெறுகிறதென்றால், தமிழ்நாட்டில், கர்நாடகாவில், பா.ஜ.க ஆளாத மாநிலங்களில் எப்படி வென்றார்கள்… தமிழ்நாட்டில் தி.மு.க வென்றதற்கு இ.வி.எம்-தான் காரணமா?

எனக்கு நாடாளுமன்ற உறுப்பினராகப் பேச வேண்டும் என்பதுதான் ஆசை. தி.மு.க-வின் தேர்தல் அறிக்கையை, வெறும் வெற்று அறிக்கையாகத்தான் பார்க்கிறோம். இந்தத் தேர்தல் அறிக்கையில் எந்தப் புதுமையும் இல்லை. 20 ஆண்டுகளுக்கு முன்னாள் கொடுத்த அதே அறிக்கைதான். எனவே அந்த அறிக்கை தோல்வி அறிக்கை” என்றார்.