“பதவி விலகிவிட்டு தேர்தலை சந்தியுங்கள்” – நமச்சிவாயத்துக்கு புதுச்சேரி அதிமுக வலியுறுத்தல்

புதுச்சேரி: “புதுச்சேரி உள்துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, மக்களவைத் தேர்தலை சந்திக்க வேண்டும்” என்று பாஜக வேட்பாளர் நமச்சிவாயத்துக்கு புதுச்சேரி அதிமுக வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “புதுச்சேரி மாநில அந்தஸ்து சம்பந்தமாக மத்தியில் ஆளும் பாஜக, ஏற்கெனவே மத்தியில் ஆட்சி செய்த காங்கிரஸ் – திமுக கூட்டணியும் வரும் மக்களவை தேர்தலை முன்னிறுத்தி பொய் வாக்குறுதிகளை அளிக்கின்றனர். 10 ஆண்டுகளுக்கு மேலாக இருந்த திமுக – காங்கிரஸ் மத்திய கூட்டணி ஆட்சியில் புதுச்சேரி மாநிலத்துக்கு மாநில அந்தஸ்து வழங்கவில்லை.

கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சியிலும் தற்போதைய மாநில பாஜக கூட்டணி ஆட்சியிலும் மாநில அந்தஸ்து வழங்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதே போன்று புதியதாக உருவாக்கப்பட்ட காஷ்மீர், லடாக் ஆகிய சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசங்களை மத்திய நிதிக்குழுவில் மத்திய பாஜக அரசு சேர்த்துள்ளது. ஆனால் 40 ஆண்டுகளுக்கு மேலாக சட்டப்பேரவை உள்ள புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை மத்தியில் ஆளும் பாஜக அரசு மத்திய நிதிக்குழுவில் சேர்க்காமல் நிதி ஒதுக்கீடு செய்வதில் மிகப்பெரிய துரோகத்தை நம் மாநிலத்துக்கு ஏற்படுத்தியுள்ளது.

பாஜகவின் இந்த துரோக செயலையும் புதுச்சேரி மக்கள் மறந்துவிடமாட்டார்கள். 30 ஆண்டுகளுக்கு முன்பே மத்திய அரசை வலியுறுத்தி மத்திய அமைச்சரவையில் புதுச்சேரி மாநிலத்துக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற ஒரு முடிவினை ஏற்படுத்தி தந்தவர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா.

கடந்த ஆண்டுகூட புதுச்சேரி மாநிலத்துக்கு மாநில அந்தஸ்து வழங்காத மத்திய பாஜக அரசையும், மாநில அந்தஸ்து பெறுவதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்காத புதுச்சேரி பாஜக – என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி அரசையும் கண்டித்து பந்த் போராட்டம் நடத்த ஆணையிட்டவர் எடப்பாடி பழனிச்சாமி.

மாநில நலனில் அக்கறை உள்ள பல்வேறு அமைப்புகளும், குறிப்பாக சுயேட்சை எம்எல்ஏ சட்டப்பேரவைக்கு உள்ளேயும், வெளியேயும் மாநில அந்தஸ்தை பெற வலியுறுத்தி கோரிக்கை வைத்து வருகின்றனர்.

ஆனால், புதுச்சேரி சட்டப்பேரவையில் ஆட்சியில் உள்ள கட்சியாக இருந்தாலும், எதிர்கட்சியாக உள்ள திமுக -காங்கிரஸாக இருந்தாலும் இந்த 3 ஆண்டுகாலத்தில் ஒரு முறை கூட வாய் திறந்து மாநில அந்தஸ்துக்காக குரல் கொடுத்தது இல்லை. நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் பாஜக சார்பில் நம் மாநிலத்தின் உள்துறை அமைச்சராக இருக்கும் நமச்சிவாயம் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஒரு சமநிலையை உருவாக்கும் விதத்தில் நமச்சிவாயம் உள்துறை அமைச்சர் பதவியை தானாக முன்வந்து ராஜினாமா செய்துவிட்டு தேர்தலை சந்திக்க வேண்டும். உள்துறை அமைச்சர் என்கின்ற நிலையில் தற்போது அவரிடம் காவல்துறை உள்ளிட்ட பல முக்கிய துறைகளின் அமைச்சராக உள்ளார்.

தேர்தலின்போது அவர் துறை சார்ந்த அரசு இயந்திரங்கள் முழுமையாக அவருக்கு ஆதரவாக செயல்படக்கூடிய சூழ்நிலை ஏற்படும். இவ்விஷயத்தில் தேர்தல் ஆணையம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஏற்கனவே மறைந்த கண்ணன் உள்துறை அமைச்சராக இருந்த போது, தான் வகித்த அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டுத்தான் எம்பி தேர்தலில் நின்றார் என்பதை பாஜக கட்சி உணர வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.