பிளாஷ்பேக் : இலக்கிய தரம் வாய்ந்த தமிழ் பாடல்களை எழுதிய மலையாளி

தமிழ் சினிமா பாடலாசிரியர்களில் முக்கியமான ஆளுமையாக இருந்தவர் எம்.ஜி.வல்லபன். ஆனால் அவர் அதிகம் அறியப்படாமல் போனார். காரணம் அடிப்படையில் அவர் ஒரு மலையாளி. கேரள மாநிலம் திருச்சூர் பகுதியில் பெரிஞ்ஞினம் என்ற ஊரில் பிறந்தவர். வல்லபனின் பள்ளிப் பருவத்தில் குடும்பம் சென்னை வந்தது. பள்ளிப் படிப்பு மலையாள வழியிலும் தமிழ் வழியிலும் கழிந்தது, என்றாலும் தமிழில் கவிதைகளும் பாடலும் எழுதும் அளவுக்கு ஆற்றலை வளர்த்துக் கொண்டார்.

1979ம் ஆண்டு 'அன்னக்கிளி' ஆர்.செல்வராஜ் இயக்கத்தில் சுதாகர், சரிதா நடிப்பில் திரைக்கு வந்த 'பொண்ணு ஊருக்கு புதுசு' படத்தில் எம்.ஜி.வல்லபன் தனது முதல் பாடலை எழுதினார். இதுவே பின்னணி பாடகி எஸ்.பி.சைலஜாவின் முதல் பாடலாகவும் அமைந்தது. 'சோலை குயிலே… காலை கதிரே' என்ற பாடலுக்கு இளையராஜா இசை அமைத்தார். இளையராஜாவின் ஆரம்ப கால புதிய முயற்சிகளுக்கு வல்லபனின் வரிகளே பலமாக அமைந்தது.

மீன்கொடி தேரில் மன்மதராஜன் ஊர்வலம் போகின்றான் (கரும்புவில்), தீர்த்தக் கரைதனிலே (தைப்பொங்கல்), ஆகாய கங்கை பூந்தேன் மலர் சூடி (தர்மயுத்தம்) உள்ளிட்ட காலத்தால் அழியாத பல பாடல்களை எழுதினார். 'தைப்பொங்கல்' படத்தில் அவர் எழுதிய 'தீர்த்தக் கரைதனிலே' என்ற பாடல், இலக்கியச்செறிவு கொண்ட மிகச்சிறந்த பாடலாக இப்போதும் போற்றப்படுகிறது.

1980ம் ஆண்டு 'தைப்பொங்கல்' என்ற படத்தை எழுதி இயக்கினார். இதில் ராதிகா, விஜயன், சரிதா, சக்ரவர்த்தி, ராஜேஷ் நடித்தனர். இந்த படம் தோல்வி அடையவே அதன் பிறகு அவர் படங்கள் இயக்கவில்லை. ஆனால் 18க்கும் மேற்பட்ட படங்களுக்கு கதை திரைக்கதை வசனம் எழுதியுள்ளார். 2003ம் ஆண்டு மறைந்தார்.

மலையாளி என்பதாலேயே வல்லவன் மறைக்கப்பட்டாலும் அவர் பாடல்கள் காலத்திற்கும் அவர் பெயர் சொல்லிக் கொண்டிருக்கும். இன்று அவரது 81வது பிறந்த நாள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.