மிகப்பெரிய தவறு.. ரபா மீது தாக்குதல் நடத்தவேண்டாம்: இஸ்ரேலுக்கு கமலா ஹாரிஸ் வலியுறுத்தல்

வாஷிங்டன்:

இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான சண்டை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு காசா முனையில் பேரழிவை ஏற்படுத்தி உள்ளது. ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் அழிக்கப்போவதாக கூறி உக்கிரமான தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல், காசாவின் வடக்கு பகுதி முழுவதையும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது. தெற்கு முனையில் உள்ள ரபா நகரம், இஸ்ரேலின் கடைசி இலக்காக உள்ளது. அங்கிருந்து மக்களை வெளியேற்றிவிட்டு தாக்குதல் நடத்த இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது.

வடக்கில் இருந்து புகலிடம் தேடி தெற்கு நோக்கி சென்ற லட்சக்கணக்கான மக்கள் ரபா நகரில் தஞ்சமடைந்துள்ளனர். எனவே ரபா நகரில் தாக்குதலை விரிவுபடுத்தினால் மிகப்பெரிய மனித பேரழிவு ஏற்படும் என சர்வதேச சமூகங்கள் கவலை தெரிவித்துள்ளன. இது தொடர்பாக இஸ்ரேலுக்கு அமெரிக்கா தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது. சண்டையை நிறுத்துவதற்காக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் இஸ்ரேல் தனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது.

இந்நிலையில், ரபா நகரில் தாக்குதல் நடத்தும் திட்டத்தை கைவிட வேண்டும் என இஸ்ரேல் பிரதமருக்கு அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் வலியுறுத்தி உள்ளார்.

இதுதொடர்பாக சமீபத்தில் ஏ.பி.சி.-க்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

ரபா நகருக்குள் முன்னேறி தாக்குதலை தொடங்கினால், இஸ்ரேலுக்கு கடுமையான விளைவுகள் ஏற்படும். இதை நான் மறுக்கவில்லை. தாக்குதல் நடத்தப்படவேண்டுமா, இல்லையா? என்பதிலும் எங்கள் கண்ணோட்டம் தெளிவாக உள்ளது. ரபா நகரில் எந்த ஒரு பெரிய ராணுவ நடவடிக்கை மேற்கொண்டாலும் அது மிகப்பெரிய தவறு.

வரைபடங்களை பார்த்தேன். அங்குள்ள (ரபா) மக்கள் செல்ல எங்கும் வழி இல்லை. ரபாவில் உள்ள சுமார் ஒன்றரை மில்லியன் மக்களின் பாதுகாப்பை நாங்கள் பார்க்கிறோம். ஏனெனில் அவர்களை அங்குதான் போகச் சொன்னார்கள்.

இவ்வாறு கமலா ஹாரிஸ் தெரிவித்தார்.

அமெரிக்காவின் யூத பிரமுகரும், செனட் பெரும்பான்மை தலைவருமான சக் ஷுமர் கூறியதைப்போல, நேதன்யாகு அமைதிக்கு தடையாக இருப்பதாக நம்புகிறீர்களா? என்று நெறியாளர் கேள்வி எழுப்பினார். ஆனால் அவ்வாறு கூற கமலா ஹாரிஸ் மறுத்துவிட்டார்.

அதேசமயம், இந்த தாக்குதலில் அப்பாவி பாலஸ்தீனியர்கள் ஏராளமானோர் கொல்லப்பட்டுள்ளனர் என்பதில் உறுதியாக இருப்பதாக கூறினார். இஸ்ரேல்-இஸ்ரேலிய மக்கள் மற்றும் பாலஸ்தீனியர்கள் சம அளவு பாதுகாப்பு மற்றும் கண்ணியத்துடன் வாழ உரிமை உண்டு என்றும் கமலா ஹாரிஸ் குறிப்பிட்டார்.

ரபா மீதான தாக்குதல் திட்டத்தை கைவிடும்படி அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன் விடுத்த கோரிக்கையை நேதன்யாகு நிராகரித்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.