கோவாவில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் முதல் பெண்ணாக கல்வியாளர் பல்லவி டெம்போ உள்ளார்.
பாஜக சார்பில் கோவா மாநிலம் தெற்கு கோவா மக்களவைத் தொகுதியில் போட்டியிட தொழிலதிபர் பல்லவி டெம்போவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
தொழிலதிபரும், கல்வியாளருமான பல்லவி டெம்போ தற்போது இந்தோ-ஜெர்மன் கல்வி மற்றும் கலாச்சார சொசைட்டி தலைவராக உள்ளார். இவர் புனே எம்ஐடி உயர்கல்வி நிறுவனத்தில் முதுநிலை பட்டம் படித்தவர். மேலும் டெம்போ நிறுவனங்களின் செயல் இயக்குநராகவும் உள்ளார். நேற்றுமுன்தினம் பாஜக சார்பில் அறிவிக்கப்பட்ட 111 வேட்பாளர்கள் பட்டியலில் பல்லவியின் பெயரும் இடம்பெற்றுள்ளது.
கோவா மக்களவைத் தேர்தலில் இதுவரை பெண்கள் யாரும் போட்டியிட்டதே இல்லை. இதையடுத்து கோவாவில் போட்டியிடும் முதல் மக்களவை பெண் வேட்பாளர் என்ற பெருமையை பல்லவி பெற்றுள்ளார்.
தற்போது தெற்கு கோவா தொகுதி எம்.பி.யாக காங்கிரஸைச் சேர்ந்த பிரான்சிஸ்கோ சார்தின்ஹா உள்ளார். 1962 முதல் இங்கு நடைபெற்ற தேர்தல்களில் பாஜக 2 முறை மட்டுமே வென்றுள்ளது.
தெற்கு கோவா தொகுதியில், 20 பேரவைத் தொகுதிகள் அடங்கியுள்ளன. பல்லவி டெம்போவின் கணவர் நிவாஸ் டெம்போ, கோவா மாநில தொழில் வர்த்தக சபை தலைவராக (ஜிசிசிஐ) உள்ளார்.