திருநெல்வேலி: திருநெல்வேலி மக்களவை தொகுதியில் காங்கிரஸ் போட்டி வேட்பாளர்கள் இருவர் மனு தாக்கல் செய்துள்ளதால் திமுக கூட்டணி வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மக்களவை தொகுதி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கலின் இறுதி நாளான இன்று திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் கா.ப.கார்த்திகேயனிடம் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ராபர்ட் புரூஸ் வேட்புமனு தாக்கல் செய்தார். இதையொட்டி, திமுக கூட்டணி கட்சியினர் அவருடன் ஊர்வலமாக வந்திருந்தனர்.
இந்நிலையில், அவருக்கு போட்டியாக திருநெல்வேலி மக்களவை தொகுதி முன்னாள் காங்கிரஸ் எம்.பி. ராமசுப்பு தனது ஆதரவாளர்களுடன் வேட்புமனு தாக்கல் செய்ய வந்தார். தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டவர்களில் இவரும் ஒருவர். அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு வெளிமாவட்டத்தை சேர்ந்தவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டதால் அதிருப்தியில் இருந்ததாக தெரிகிறது.
இதையடுத்து அதிகாரபூர்வ வேட்பாளருக்கு போட்டியாக வேட்புமனு தாக்கல் செய்ய வந்திருந்த ராமசுப்புவிடம், ‘சுயேச்சையாக மனு தாக்கல் செய்த வந்துள்ளீர்களா?’ என்று செய்தியாளர்கள் கேட்டபோது, “நான் காங்கிரஸ்காரன்” என்று ஒற்றை வரியில் பதில் சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.
இதுபோல் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலரும், திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவருமான வானுமாமலை என்பவரும் காங்கிரஸ் போட்டி வேட்பாளராக மனு தாக்கல் செய்தார். காங்கிரஸ் வேட்பாளருக்கு போட்டியாக அக்கட்சியைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் இருவர் மனு தாக்கல் செய்துள்ளது திமுக கூட்டணி வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே காங்கிரஸ் போட்டி வேட்பாளர்கள் இருவரும் மாவட்ட தேர்தல் அலுவலரிடம் மனு தாக்கல் செய்ததை புகைப்படம் மற்றும் வீடியோ பதிவு செய்ய அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து பத்திரிகையாளர்களும், ஊடகவியலாளர்களும் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் ஆட்சியருமான கா.ப.கார்த்திகேயனின் அறைமுன் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து மாவட்ட ஆட்சியர், திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையர் ஆதர்ஷ் பசேரா உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தைக்குப் பின் போராட்டம் கைவிடப்பட்டது.
முன்னதாக ஆட்சியர் அலுவலகத்தினுள் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் வேட்புமனு தாக்கல் செய்யவந்தபோது திமுக கூட்டணி கட்சிகளை சேர்ந்த ஏராளமானோரை போலீஸார் அனுமதித்ததாகவும், நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்களுக்கு மட்டும் கட்டுப்பாடுகளை விதித்ததாகவும் கூறி போலீஸாருடன் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சத்யா உள்ளிட்ட நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதும் குறிப்பிடத்தக்கது.