மத்தியப் பிரதேசம் மற்றும் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியில் விளையாடுபவர் பூஜா வஸ்ட்ராகர். 2018ம் ஆண்டில் இருந்து இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். பூஜா வெளியிட்டுள்ள சோசியல் மீடியா பதிவு ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. சமீபத்தில் வெளியான தேர்தல் பத்திரத்தை மையப்படுத்தி அவர் வெளியிட்டு இருக்கும் பதிவிற்கு `வசூலி டைட்டான்’ என்று பெயரிட்டுள்ளார்.
அதில் பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷா, ஜே.பி.நட்டா மற்றும் பா.ஜ.க தலைவர்கள் இடம் பெற்றுள்ளனர். இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள இப்பதிவு இரவோடு இரவாக வைரலானது. அப்பதிவின் ஸ்கிரீன் ஷாட்டை எடுத்து அனைவரும் சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளனர். நெட்டிசன்கள் தங்களது கருத்துகளை தெரிவித்தனர். சிலர் இப்பதிவு காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

வேறு சிலர் `இப்பதிவு மூலம் உங்களது கிரிக்கெட் வாழ்க்கை பாதிக்கும்’ என்று எச்சரித்துள்ளனர். நெட்டிசன்களின் அச்சுறுத்தல், எச்சரிக்கை மற்றும் அறிவுரை காரணமாக பூஜா தனது பதிவை இன்ஸ்டாகிராமில் இருந்து அகற்றிவிட்டார். சிலர் `சீக்கிரம் டெலிட் செய்… கிரிக்கெட் வாழ்க்கை நாசமாகி விடப்போகிறது’ என்று குறிப்பிட்டுள்ளனர். மேலும், `பூஜா, தான் இந்த பதிவை போடவில்லை என்றும், யாரோ தனது இன்ஸ்டாகிராம் அக்கவுன்ட்டை ஹேக் செய்துவிட்டார்கள் என்றும் சொல்லக்கூடும்’ என்று சில நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரம் பெரும் சர்ச்சையைக் கிளப்பிய நிலையில், இது குறித்து விளக்கம் தெரிவித்து, மன்னிப்பு கோரியிருக்கிறார், பூஜா வஸ்ட்ராகர். இது தொடர்பாக பூஜா, “என்னுடைய கைப்பேசி என் கைவசம் இல்லாத நேரத்தில், என்னுடைய இன்ஸ்டாகிராம் கணக்கிலிருந்து இத்தகைய புகைப்படம் பதிவேற்றப்பட்டிருப்பது, என்னுடைய கவனத்துக்கு வந்திருக்கிறது. நான் மாண்புமிகு பிரதமர்மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன். இதில் நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.