2014, 2019 என இரண்டு நாடாளுமன்றத் தேர்தல்களிலும் தனிப்பெரும்பான்மையாக வெற்றிபெற்ற பா.ஜ.க, 2024 நாடாளுமன்றத் தேர்தலிலும் தனிப்பெரும்பான்மையாக 370 இடங்களையும், தேசிய ஜனநாயகக் கூட்டணியாக 400 இடங்களுக்கு மேலும் வெல்ல வேண்டும் என இலக்கு வைத்திருக்கிறது. மறுபக்கம், பா.ஜ.க மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகள் இந்தியா கூட்டணியாக ஒன்றிணைந்து தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன.

இதற்கிடையில், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன், தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதா உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் அமலாக்கத்துறையால் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இப்படியான சூழலில், கடந்த வாரம் காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது.
அதில், ஏழைக் குடும்ப பெண்களுக்கு ஆண்டுக்கு ஒரு லட்ச ரூபாய், உயர் கல்வி நிறுவனங்களில் பட்டியலின மாணவர்கள் மீதான வன்முறைகளைத் தடுக்க ரோஹித் வெமுலா சட்டம், தேர்தல் பத்திரங்கள் மீது விசாரணை, விவசாயிகளின் MSP கோரிக்கையை நிறைவேற்றுதல், நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றிருந்தன.

அதைத் தொடர்ந்து, காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து விகடன் வலைதளப் பக்கத்தில் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. அதில், `காங்கிரஸ் கட்சி வெளியிட்டிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் வாக்குறுதிகளுக்கு நீங்கள் கொடுக்கும் மதிப்பெண் என்ன?’ என்ற கேள்வி கொடுக்கப்பட்டு, `0 – 3, 4 – 6, 7 – 8, 9 – 10′ என நான்கு விருப்பங்கள் தரப்பட்டிருந்தது.
இந்த நிலையில் கருத்துக்கணிப்பு முடிவில், காங்கிரஸின் வாக்குறுதிக்கு அதிகபட்சமாக 35 சதவிகிதம் பேர் 9 – 10 மதிப்பெண் வழங்கியிருக்கிறார்கள். அதற்கடுத்தபடியாக, 30 சதவிகிதம் பேர் 0 – 3 மதிப்பெண்களும், 25 சதவிகிதம் பேர் 7 – 8 மதிப்பெண்களும், 10 சதவிகிதம் பேர் 4 – 6 மதிப்பெண்களும் வழங்கியிருக்கின்றனர்.

இந்த நாடாளுமன்றத் தேர்தலில் தனியாக 370 இடங்களும், தேசிய ஜனநாயகக் கூட்டணியாக 400 இடங்களுக்கு மேலும் வெற்றி பெறுவோம் என பா.ஜ.க தலைவர்கள் கூறுவது குறித்து விகடன் வலைதளப் பக்கத்தில் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டு வருகிறது. இதில் கலந்துகொள்ளப் பின்வரும் லிங்கை க்ளிக் செய்யவும்…